×

ஸ்ரீபெரும்புதூரில் போலீசை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் போலீசாரின் மனித உரிமை மீறலை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற பார் கவுன்சிலின் முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான மதன்ராஜ் வீட்டில் கடந்த 2ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை போலீசார் அத்துமீறி உள்ளே நுழைந்து வீட்டின் உள்ளே இருந்த சிசிடிவியை உடைத்து, கம்யூட்டர் ஹார்டிஸ்கை எடுத்து சென்றதாகவும், இது மனித உரிமை மீறல் என்று கடந்த 12ம் தேதி நடந்த பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

இந்நிலையில்,ஸ்ரீபெரும்புதூர் பார் கவுன்சிலில் பதிவு செய்த அனைத்து வழக்கறிஞர்களும் காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை போலீசார் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போலீசாரின் மனித உரிமை மீறலை கண்டித்து நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, அத்துமீறலில் ஈடுபட்ட போலீசார் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்ற வளாகத்தில் இருந்து சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வரை கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி., சுனில் சம்பவ இடத்திற்கு வந்து, பேரணியாக சென்ற வழக்கறிஞர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீதிமன்ற புறக்கணிப்பு கூட உங்களை கேட்டு தான் செய்ய வேண்டுமா? என்று வழக்கறிஞர்கள் டி.எஸ்.பி.,சுனிலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு டி.எஸ்.பி சுனில் நீதிமன்ற புறக்கணிப்பை நீங்கள் நீதிமன்ற வளாகத்தில் செய்யுங்கள் உங்களை தடுக்கவில்லை தேசிய நெடுஞ்சாலைக்கு ஏன் வருகிறீர்கள் என்று பதிலளித்து வழக்கறிஞர்களிடம் வாக்கு வாதம் செய்தார். இதனால், சிறிது நேரம் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பிறகு டி.எஸ்.பி., கோரிக்கையை ஏற்று அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற வளாகத்திலே புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Sriperumbudur , Lawyers boycott court in Sriperumbudur condemning police
× RELATED சென்னையில் தபால் வாக்குப்பதிவு...