ஓபிஎஸ் அணிக்கு மிட்டாய் கொடுத்து அழைத்து செல்ல நான் சிறுபிள்ளை அல்ல: உதயகுமாருக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ பதிலடி

மதுரை: மிட்டாய் கொடுத்து யாரும் என்னை ஓபிஎஸ் அணிக்கு அழைத்து செல்லவில்லை என உதயகுமாருக்கு, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பதிலடி கொடுத்துள்ளார். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ அய்யப்பன். நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிறுபிள்ளைக்கு மிட்டாய் கொடுத்து அழைத்து செல்வது போல், என்னை, ஓபிஎஸ் அணிக்கு அழைத்து சென்றனர் என ஒரு சிலர் கூறி வருகின்றனர். நான் 8 வயதில் இருந்து எம்.ஜிஆர் விசுவாசியாக இருந்து, கட்சிப் பணியாற்றி வருகிறேன்.

மிட்டாய் கொடுத்து  கூட்டி செல்ல நான் சிறுபிள்ளை அல்ல. நான் கட்சி பணியாற்றியபோது அவர் (முன்னாள் அமைச்சர் உதயகுமார்) பிறந்து இருக்க மாட்டார். அவர் என்னைப்பற்றி விமர்சிக்க தேவையில்லை. சிறுபிள்ளைத்தனமாக பேசி வருகிறார். அதிமுக ஒன்றிணைய ஓபிஎஸ் கட்டளைப்படி நாங்கள் யாரையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். எதிர் வரும் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக சந்திக்கும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Related Stories: