×

கனியாமூர் தனியார் பள்ளியில் நிருபர், கேமரா மேன் மீது பயங்கர தாக்குதல்

* காரில் கடத்திச் செல்ல முயற்சி
* மருத்துவனையில் தீவிர சிகிச்சை

ஆத்தூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் நடைபெறும் சீரமைப்பு பணியை படமெடுக்க சென்ற வாரப்பத்திரிகை நிருபர், கேமரா மேன் தாக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவி இறப்பின் காரணமாக கலவரம் நடந்த கனியாமூர் பள்ளியில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சீரமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது. இந்நிலையில், சென்னையில் உள்ள நக்கீரன் வாரப்பத்திரிகை தலைமை சிறப்பு செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ்(56), கேமரா மேன் அஜீத்குமார்(26) ஆகியோர், காரில் வந்தனர்.

பள்ளி அருகே காரை நிறுத்தி விட்டு சீரமைக்கும் பணியை படம் எடுத்துள்ளனர். இதை அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தடுத்ததுடன், செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, செய்தியாளர் காரில் ஏறி புறப்பட்டார். அப்போது, பணியில் இருந்த சிலர், டூவீலரில் காரை விரட்டினர். தலைவாசல் அருகே சர்வீஸ் சாலையில் காரை மறித்து நிறுத்தி, செய்தியாளர் தாமோதரன் பிரகாசை கடத்திச்செல்ல முயன்றனர். அப்போது கேமரா மேன் அஜீத்குமார், தப்பி ஓடினார். உடனே டூவீலரில் வந்த நபர்கள், அவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். இதை அவ்வழியாக சென்ற சிலர் பார்த்து விசாரித்தனர்.

அதற்கு அவர்கள், தங்களது டூவீலர் மீது காரை மோதி விட்டு, நிற்காமல் வந்துவிட்டனர் எனக்கூறி, மீண்டும் அவரை தாக்கினர். இதையடுத்து, பொதுமக்கள் அவர்களை, அருகில் இருந்த தலைவாசல் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த ஏட்டு சின்னசேலம் போலீசில் புகார் அளிக்கும்படி கூறியதால், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். பின்னர், செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், ஏட்டுவிடம் கூறுகையில், ‘கனியாமூர் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக இருக்கும் மோகன், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரன்,

பள்ளி நிர்வாகியின் தம்பி அருள்சுபாஷ் ஆகியோர் தலைமையிலான கும்பல், என்னை தாக்கி, கொலை செய்யும் நோக்கில் எனது காரிலேயே கடத்திச்செல்ல முயன்றனர். அங்கு வந்த பொதுமக்கள், என்னை அவர்களிடம் இருந்து மீட்டனர். எனது செல்போன் மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டனர்,’ என்றார். காயமடைந்த செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், கேமரா மேன் அஜீத்குமார் ஆகியோர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Kaniamoor , Reporter, camera man brutally attacked in Kaniamoor private school
× RELATED கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு