×

சுகேஷிடமிருந்து விலகுமாறு ஜாக்குலினை எச்சரித்த சல்மான் கான், அக்‌ஷய்குமார்

புதுடெல்லி: குற்றவாளியான சுகேஷிடமிருந்து விலகி இருக்கும்படி நடிகை ஜாக்குலினுக்கு நடிகர்கள் சல்மான் கான், அக்‌ஷய் குமார் எச்சரித்துள்ளனர். ஆனால் சுகேஷை திருமணம் செய்ய இருந்தாராம் ஜாக்குலின். 200 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கில் டெல்லி காவல்துறையால் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். காரணம், சுகேஷின் காதலியான ஜாக்குலின், அவரிடமிருந்து பல கோடி மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளார். சமீபத்தில் ஜாக்குலினை போலீசார் விசாரித்தனர்.

இதில் தெரிய வந்த தகவல்கள்: ஜாக்குலின் சுகேஷுடன் தொடர்பில் இருந்தபோது, ஜாக்குலினின் சிகையலங்கார நிபுணர், அவரை எச்சரித்துள்ளார். சுகேஷ் ஒரு மோசடி நபர் என வெளியான செய்திகளை ஜாக்குலினுக்கு காட்டியிருக்கிறார். ஆனால் அதை ஜாக்குலின் பொருட்படுத்தவில்லை. ரூ.5.71 கோடி மதிப்பிலான பரிசுகளை சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலினுக்கு வழங்கியதாக அமலாக்கத்துறை மதிப்பிட்டுள்ளது. இது தவிர, ஜாக்குலினின் உறவினர்களுக்கு 173,000 அமெரிக்க டாலர்கள் மற்றும் 27,000 ஆஸ்திரேலிய டாலர்கள் கடனாக வழங்கியுள்ளார்.

பரிசுகளில் தலா ரூபாய் 9 லட்சம் மதிப்புள்ள மூன்று பாரசீக பூனைகள், 52 லட்சம் ரூபாய் விலையுள்ள அரேபிய குதிரை, 15 ஜோடி காதணிகள் கொண்ட வைர செட், விலையுயர்ந்த மண்பாண்டங்கள், குஸ்ஸி மற்றும் சேனல் போன்ற விலையுயர்ந்த பிராண்டுகளின் டிசைனர் பைகள், இரண்டு குஸ்ஸி பிராண்ட் ஜிம் ஆடைகள், பல ஜோடி லூயிஸ் உய்ட்டன் பிராண்ட் காலணிகள், இரண்டு ஹெர்ம்ஸ் பிராண்ட் வளையல்கள், ஒரு மினி கூப்பர் கார் மற்றும் பல ரோலக்ஸ் பிராண்ட் வாட்ச்கள் உள்ளிட்டவற்றை ஜாக்குலினுக்கு சுகேஷ் வழங்கினார்.

சுகேஷ் சந்திரசேகரை தவிர்க்குமாறு சல்மான் கான் மற்றும் அக்‌ஷய் குமார் இருவரும் ஜாக்குலின் பெர்னாண்டஸை எச்சரித்துள்ளனர். ‘‘சுகேஷிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு சக நடிகர்களால் அவளுக்கு அறிவுறுத்தப்பட்டது, ஆனால் அவர் தொடர்ந்து அவரைச் சந்தித்து கார்கள் மற்றும் வம்சாவளி செல்லப்பிராணிகள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை ஏற்றுக்கொண்டார்” என்று ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார். மேலும் சுகேஷை திருமணம் செய்ய இருப்பதாக தனது தோழிகளிடம் ஜாக்குலின் கூறியிருக்கிறார்.


Tags : Salman Khan ,Akshay Kumar ,Jacqueline ,Sukesh , Salman Khan, Akshay Kumar warn Jacqueline to leave Sukesh
× RELATED ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும்...