×

ஆட்சி, அதிகாரத்தில் 70 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம்: இந்திய ஜனாதிபதி, அமெரிக்க அதிபர் உள்ளிட்டோர் பங்கேற்பு

லண்டன்: ஆட்சி, அதிகாரத்தில் 70 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்த இங்கிலாந்து ராணியின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஆனால் ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு அழைப்பு விடுக்காததால் அந்த நாடுகளின் தலைவர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்கவில்லை. இங்கிலாந்து நாட்டின் ராணியாக 70 ஆண்டு காலம் பதவியில் இருந்த இரண்டாம் எலிசபெத் (96) கடந்த 8ம் தேதி பால்மோரல் கோட்டையில் காலமானார். ராணியின் மறைவையடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் (73) அந்த நாட்டின் மன்னர் ஆனார். இவரது மகனான இளவரசர் வில்லியம், வேல்ஸின் புதிய இளவரசராக ஆனார்.

ராணியின் உடல் பால்மோரல் கோட்டையில் இருந்து, முதலில் எடின்பரோவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் லண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 14ம் தேதி மாலை முதல் ராணியின் உடல், நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வந்து ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

ராணியின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படுவதையடுத்து, உலக நாடுகளின் மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என 2,000க்கும் மேற்பட்ட தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் லண்டனில் குவிந்துள்ளனர். குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்ட உலக தலைவர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் இறுதிச் சடங்கில்  பங்கேற்றாலும் கூட, ரஷ்யா, பெலாரஸ்,  ​​மியான்மர், ஆப்கானிஸ்தான், சிரியா, வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு கொடுக்கவில்லை. அதனால்  அந்த நாட்டின் சார்பில் ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படவில்லை.

இந்நிலையில் இன்று காலையுடன் ராணிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முடிவுக்கு வந்தது. தொடர்ந்து இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இறுதிச்சடங்கு தொடர்பான சடங்குகள் தொடங்குகின்றன. இங்கிலாந்து முழுவதும் ராணியின் இறுதிச் சடங்கிற்காக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. ராணியின் இறுதிச் சடங்கின்போது டிரோன்கள் பறக்க  தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான நிலையம் விமானங்களை இயக்காது. 57 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் அரசு  மரியாதையுடன் நடைபெறுகிற இறுதிச்சடங்கு என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் மரியாதையுடன் ராணியின் உடல் ராணுவ வாகனத்தில் ஏற்றப்படும். ராணியின் கிரீடம் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் இருந்து அபேக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். வின்ட்சர் கோட்டையை  ராணுவ வாகனம் அடைந்ததும், அங்குள்ள புனித ஜார்ஜ் தேவாலய பேராயரிடம் ராணியின் உடல்  வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டி ஒப்படைக்கப்படும். அங்கு மவுன அஞ்சலிக்குப்  பிறகு, முப்படைகளின் இசை மரியாதை செலுத்தப்படும். இங்கிலாந்து திருச்சபையின் மூத்த உறுப்பினரான கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, ராணியின் இறுதிச் சடங்கிற்கு தலைமை வகிப்பார்.

அதன்பிறகு,  ராணி எலிசபெத்தின் கிரீடம், சார்லஸின் மனைவியும் புதிய ராணியுமான  கமீலாவிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின்னர் மறைந்த எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகில் ராணியின் உடல் அடக்கம் செய்யப்படும். மாலை 5 மணிக்குள் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



Tags : Queen Elizabeth of England ,President of India ,President of the United States , Queen Elizabeth of England, who flew the flag of England for 70 years in power and rule: President of India, President of the United States, etc.
× RELATED நடராஜர் கோயிலில் ‘பாரத்’ என கையெழுத்திட்டதுணை ஜனாதிபதி