×

துலீப் கோப்பை கிரிக்கெட்: பைனலில் தெற்கு, மேற்கு

கோவை: துலீப் கோப்பை டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியின் பைனலில் விளையாட தெற்கு, மேற்கு மண்டல அணிகள் தகுதி பெற்றன. கோவையில் நடந்த முதல் அரையிறுதியில் மத்திய மண்டல அணியுடன் மோதிய மேற்கு மண்டலம் 279 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. முதல் இன்னிங்சில் மேற்கு மண்டலம் 257 ரன், மத்திய மண்டலம் 128 ரன் எடுத்தன. 2வது இன்னிங்சில் மேற்கு 371 ரன் குவித்தது. 501 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய மத்திய மண்டலம், கடைசி நாளான நேற்று 221 ரன்னுகு ஆல் அவுட்டானது. ரிங்கு சிங் அதிகபட்சமாக 65 ரன், குமார் கார்த்திகேயா 39, அஷோக் மெனரியா 32 ரன் எடுத்தனர்.

மேற்கு பந்துவீச்சில் ஷாம்ஸ் முலானி 5, சிந்தன் கஜா 3, உனத்கட், அதித் சேத் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். சேலத்தில் நடந்த 2வது அரையிறுதியில் தென் மண்டலம் முதல் இன்னிங்சில்  8 விக்கெட் இழப்புக்கு 630 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.  வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 207 ரன்னுக்கு சுருண்டது. தென் மண்டலத்துக்காக விளையாடிய தமிழக வீரர் சாய்கிஷோர் 7 விக்கெட் அள்ளினார். 2வது இன்னிங்சில்  தெற்கு மண்டலத்தின் ரவி தேஜா மீண்டும் சதம் விளாச, அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு  316 ரன் குவித்து டிக்ளேர்  செய்தது.

740 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வடக்கு மண்டலம் 94 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் யஷ் துல் 59 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். தெற்கு மண்டலம் 645 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சாய்கிஷோர், தியாகராஜன்,  கிருஷ்ணப்பா தலா 3 விக்கெட் எடுத்தனர். கோவையில்  நாளை மறுநாள் தொடங்கும் பைனலில் (செப். 21-25) தெற்கு - மேற்கு மண்டல  அணிகள் மோத உள்ளன.

Tags : Duleep Cup , Duleep Cup Cricket: South, West in final
× RELATED துலீப் கோப்பை பைனல்:தெற்கு மண்டலம் முன்னிலை