×

சென்னை ஓபன் டென்னிஸ்; லின்டா-மேக்டா லினெட் பைனலில் இன்று மோதல்

சென்னை: சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் தொடர் நுங்கம்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி போட்டியில் தரவரிசையில் 130வது இடத்தில் உள்ள செக்குடியரசின் 17 வயதான லின்டா புருவிர்தோவா, 25 வயதான அர்ஜென்டினாவின் நடியா போடோரோஸ்கோவை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லின்டா புருவிர்தோவா 5-7, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். மற்றொரு அரையிறுதியில், தரவரிசையில் 64வது இடத்தில் உள்ள 30 வயதான போலந்தின் மேக்டா லினெட், இங்கிலாந்தின் 23 வயது கேட்டி ஸ்வானுடன் மோதினார்.

இதில் முதல் செட்டில் மேக்டா லினெட் 3-0 என முன்னிலையில் இருந்த போது உடல் நலம் பாதிப்பு காரணமாக கேட்டி ஸ்வான் போட்டியில் இருந்து பாதியில் விலகினார். இதனால் மேக்டா லினெட் இறுதிப்போட்டியை எட்டினார். இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் பைனலில் லின்டா-மேக்டா லினெட் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இதேபோல் மாலை 5 மணிக்கு இரட்டையர் பைனலில் கனடாவின் கேப்ரியல்லா டாப்ரோஸ்கி, பிரேசிலின் லுசா ஸ்டெபானி ஜோடி, ரஷ்யாவின் அன்னா லின்கோவா, ஜார்ஜியாவின் ஜோடியை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.2 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடும் வீராங்கனைக்கு ரூ.25 லட்சமும், இரட்டையர் பிரிவில் வெற்றி பெறும் ஜோடிக்கு ரூ.9 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இறுதிபோட்டியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்டு ரசிக்கிறார். தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் பங்கேற்று சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு பரிசுத்தொகை மற்றும் கோப்பையை வழங்குகிறார்.

Tags : Chennai Open Tennis ,Linda ,Maxta Linet , Chennai Open Tennis; Linta-Magda Linnet clash today in the final
× RELATED சென்னை ஓபன் டென்னிஸ் சுமித் நாகல் சாம்பியன்