×

3 தலைநகர் திட்டத்திற்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து ஆந்திரா அப்பீல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் திட்டத்திற்கு தடை விதித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம், தனியாக பிரிந்த பின்னர், ஐதராபாத் தெலங்கானாவின் நிரந்தர தலைநகரமானது. இதனால், ஆந்திராவுக்கு குண்டூர்-விஜயவாடா இடையே மாநிலத்தின் மையப் பகுதியில் தலைநகரம் அமைக்க சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் பெறப்பட்டன. ஆனால், ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததும், 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அமராவதியில் சட்டப்பேரவையும், கர்னூலில் உயர் நீதிமன்றமும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும் செயல்படும் என சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது.

இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அதோடு, விவசாயிகள் தரப்பில் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘அமராவதி மட்டுமே தலைநகரமாக இருக்க வேண்டும். அதை மாற்றி 3 தலைநகரங்கள் அமைக்க சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை. நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு 6 மாதத்திற்குள் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்’ என கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆந்திர அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
அதில், ‘கூட்டாட்சி கட்டமைப்பின் கீழ், ஒவ்வொரு மாநிலமும் அதன் தலைநகரை வடிவமைப்பதற்கான உரிமை உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

Tags : 3 Andhra Appellate Supreme Court , 3 Andhra Appellate Supreme Court filed a petition challenging the judgment against the Capital Project
× RELATED ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க...