×

ஓணம் பண்டிகை நிறைவு; சாம்பார் வெள்ளரிக்கு போதிய விலை இல்லை: விவசாயிகள் வேதனை

நெல்லை: ஓணம் பண்டிகை நிறைவு பெற்ற நிலையில் சாம்பார் வெள்ளரிக்கு போதிய விலை இல்லை என நெல்லையைச் சேர்ந்த விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகத்தில் நெல்லை, ெதன்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கேரளாவுக்கு அதிகளவு விற்பனைக்கு செல்லும் சாம்பார் வெள்ளரியை, ஓணத்தையொட்டி அறுவடை செய்யும் விதமாக பல விவசாயிகள் முன்கூட்டியே சாகுபடி செய்து அதன்மூலம் நல்ல வருமானம் ஈட்டுவர். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகேயுள்ள பகுதிகளில் சில விவசாயிகள் தற்போது சாம்பார் வெள்ளரியை அறுவடை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கோபாலசமுத்திரம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் சாம்பார் வெள்ளரியை அறுவடை செய்து கொண்டிருந்த விவசாயி இசக்கியிடம் கேட்டபோது, ‘‘நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையையொட்டி அறுவடை செய்யும் விதமாக சாம்பார் வெள்ளரியை பயிர் செய்வார்கள். சாம்பார் வெள்ளரி விதை விதைத்த 70 நாட்களில் காய்த்து பலன் தரக்கூடியது. இதற்கு கிணற்றுநீரை மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சுகிறேன். விதைக்கு ரூ.2 ஆயிரம், உரம், பூச்சிமருந்து, களைவெட்ட, மருந்தடிக்க, ஆள்கூலி என ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன்.

இதிலிருந்து ஒரு மாதத்திற்கு 5 அல்லது 6 முறை காய்கள் பறிக்கலாம். ஒரு முறைக்கு 10 மூட்டைகள் வரை கிடைக்கிறது. ஒரு மூட்டையில் 50 கிலோ வரை இருக்கும். சாம்பார் வெள்ளரிக்கு ஓணத்தையொட்டி ஒரு கிலோவுக்கு ரூ.12 வரை எங்களுக்கு கிடைத்த நிலையில், தற்போது ஒரு கிலோவுக்கு ரூ.3 அல்லது ரூ.4 மட்டுமே கிடைக்கிறது. இதனால் செலவு ெசய்த பணத்தைக்கூட திரும்பப்பெற முடியாத நிலை உள்ளது” என்று வேதனையுடன் கூறினார்.

Tags : Onam , Onam festival ends; Inadequate price for sambar cucumber: Farmers' agony
× RELATED ஓணம் ஸ்பெஷல் அடை பிரதமன்