பனாஜி: கோவாவில் முன்னாள் முதல்வர் திகாம்பர் காமத் உள்பட 8 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நேற்று முன்தினம் பாஜ.வில் சேர்ந்தனர். இதை தொடர்ந்து, அங்கு அமைச்சரவை விரிவாக்கம் இருக்க கூடும் என்று கருதப்படும் நிலையில், ஆளுநரை முதல்வர் சந்தித்து பேசி உள்ளார். ஆனால், பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் குறித்து பேசவே ஆளுநரை சந்தித்தாக முதல்வர் சாவந்த் கூறியுள்ளார். இதனிடையே, பாஜ மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சேர்ந்திருப்பதால் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
முன்னாள் முதல்வர் காமத் உள்பட குறைந்தபட்சம் 2 எம்எல்ஏக்களுக்காவது அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது’ என்று தெரிவித்தார். இந்நிலையில், எம்எல்ஏக்கள் கட்சி தாவியதால் கோவா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் திணேஷ் குண்டு ராவ், கட்சி நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த நேற்று கோவா வந்தார். சபாநாயகர் அங்கீகாரம் காங்கிரஸ் கட்சியில் மொத்த உள்ள 11 எம்எல்ஏக்களில் 8 எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்துள்ளனர். இதனால் இந்த 8 பேரையும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சியாக அங்கீகரித்து அவர்களை ஆளும் பாஜ.வில் இணைக்க சபாநாயகர் ரமேஷ் தாவத்கர் ஒப்புதல் அளித்து உள்ளார்.
