×

வாணியம்பாடி பாலாற்று பகுதிகளில் இரவு பகலாக நடைபெறும் மணல் கொள்ளை தடுக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வழியாக செல்லும் பாலாற்றில் கடந்த சில வாரங்களாக ஆந்திர வனப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக, நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வாணியம்பாடி நகர பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில், கடந்த காலங்களில் மணல் கொள்ளையர்கள் அதிக அளவில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட காரணத்தினால், பாலாற்று பகுதியில் ஆங்காங்கே 15 அடிக்கும் மேல் பள்ளங்கள் ஏற்பட்டு நீர் நிரம்பியுள்ளது.

இதனால், நகர பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மணல் கொள்ளையில் ஈடுபட முடியாத மணல் கொள்ளையர்கள் நகரத்தை ஒட்டியுள்ள கிராம பகுதிகளான ஒடப்பேரி துவங்கி பழைய வாணியம்பாடி, கொடையாஞ்சி, ஆவாரங்குப்பம், அம்பலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை குறி வைத்து மாட்டு வண்டிகள், பிக்கப் வாகனங்கள் மற்றும் டிராக்டர்களில் மணலை அள்ளிச் செல்லும் மணல் கொள்ளையர்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மணலை விற்பனை செய்வதாகவும், இதனை தட்டிக் கேட்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஆற்றங்கரையோர பகுதிகளில் தொடர் மணல் கொள்ளை நடைபெறுவதன் காரணமாக, கரையோரம் உள்ள விவசாய நிலங்களில் மண் சரிவு ஏற்படுவதாகவும், பாராம்பட்சமின்றி மணல் கொள்ளைக்காக தோண்டப்படும் பள்ளங்களால் நிலத்தடி நீர் மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்று விடுவதாகவும், அவ்வாறு ஏற்பட்ட பள்ளங்களில் நிரம்பும் நீரில் விளையாட செல்லும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பள்ளத்தில் சிக்கி அசம்பாவித சம்பவங்கள் நேரும் அபாயம் நிலவுவதாகவும் பாலாற்றங்கரை பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாலாற்றின் பல பகுதிகளில் இருந்து நீரேற்று குழாய்கள் அமைக்கப்பட்டு, பல ஊர்களுக்கு பைப்புகள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில், மணல் கொள்ளையர்களின் வாகனங்களால் குடிநீர் பைப்புகளும் அதிக அளவில் சேதமடைவதாகவும், இதனால் பலமுறை குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பழைய வாணியம்பாடி பகுதியிலிருந்து, பெரியப்பேட்டை பகுதிக்கு செல்லக்கூடிய மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களால் அதிகளவு மணலை தோண்டி எடுத்து வருவதனால் மேம்பாலத்தின் தூண்கள் பலம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணல் கட்டளை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Tags : Day and night sand robbery in Vaniyampadi desert areas should be stopped; Public demand
× RELATED திருப்பூர் அருகே மின்னல் தாக்கி 3 மாடுகள் உயிரிழப்பு