கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் புதிய மின் கணக்கீடு எப்படி?: அமைச்சர் விளக்கம்

சென்னை: மின் கணக்கீட்டைப் பொறுத்தவரை 60 நாட்களில், 10ம் தேதி வரை கணக்கிட்டு 9  நாட்களுக்கு பழைய கட்டணமும், மீதம் இருக்கக்கூடிய 51 நாட்களுக்கு புதிய  கட்டணமும் நிர்ணயம் செய்யப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு முழுவதும் 99 விழுக்காடு புகார்களுக்கான தீர்வுகள் காணப்பட்டிருக்கின்றன.  மின் கணக்கீட்டைப் பொறுத்தவரை 60 நாட்களில், 10.09.2022 வரை கணக்கிட்டு 9 நாட்களுக்கு பழைய கட்டணமும், மீதம் இருக்கக்கூடிய 51 நாட்களுக்கு புதிய கட்டணமும் நிர்ணயம் செய்யப்படும்.  மின் கட்டணம் திருத்தி அமைப்பது சம்பந்தமாக ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களுடைய கருத்துக்களை கேட்பதற்காக கூட்டங்களை மூன்று இடங்களில் நடத்தியது.  மெயில் மற்றும் நேரில் வந்து புகார் தந்தது உட்பட மொத்தம் 7,338 புகார்கள் மட்டும் தான் வரப்பெற்றது.  தமிழ்நாட்டில் மொத்தம் 3.5 கோடி மின் இணைப்புகள் இருக்கின்றன.  ஆனால், புகார் வரப்பெற்றது 7,338 மட்டுமே.  

சிலர் கூறும் கருத்துக்கள் அரசியலுக்காக கூட இருக்கலாம்.  நாளை மறுநாள் 16ம் தேதி ஆர்ப்பாட்டம் என்று ஒரு கட்சி அறிவித்திருக்கிறது, அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது எந்த அளவிற்கு உயர்த்தினார்கள். பிறகு மின்சார வாரியம் எவ்வளவு கடனை சுமந்தது.  1,59,000 கோடி கடன்,  16,500 கோடியாக ஒரு வருடத்திற்கு வட்டி மட்டும் கட்டுகிறோம். வெறும் 67 கோடி  பாக்கி இருந்த சூழலில் நமக்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தை கொடுக்காமல் நிறுத்தி வைத்தார்கள்.  மின்சார கட்டணத்தின் உயர்வு தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவே உள்ளது.  தமிழக முதல்வர் கடந்த ஆண்டு 9,000 கோடி அரசு நிதியை மானியமாக கொடுத்தார்கள்.  இந்த வருடம் 4,000 கோடி அளவிற்கான அரசு மானியம் கொடுப்பதற்கு ஒப்புதலை கொடுத்திருக்கிறார்கள்.   

தமிழகத்தில்அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 50 விழுக்காடுக்கும் மேலாக மின் தேவை ஏற்படும் என்பது கணக்கிடப்பட்டிருக்கிறது.  அதற்கான மின் உற்பத்தி திட்டங்களும் விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது. ‘5 வருடத்தில் 6,220 மெகாவாட் அளவிற்கு கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறன் அமைப்பதற்கான பணிகள் முடிக்கப்பட்டு மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதைவட கேபிள்களைப் பொறுத்தவரை தண்டையார்பேட்டை மற்றும் வியாசர்பாடி ஆகிய இரண்டு கோட்டங்களில், 133 கோடி ரூபாய்க்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. மீதம் இருக்கக்கூடிய பகுதிகளில் 1,103 கோடி ரூபாய்க்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியினுடைய முழுப் பகுதிகளுமே விரைவாக புதைவட கேபிள்கள் போட வேண்டும் என்பது  முதலமைச்சர் அவர்களின் உத்தரவு.  

சென்னையில்138 துணை மின் நிலையங்களுக்கான திட்ட மதிப்பீடுகள் முழுவதுமாக தயார் செய்யப்பட்டு ரூ.7,525 கோடி அளவிற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அதிமுக ஆட்சியில் 60%மேல் மின்கட்டணம் உயர்வு: சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்கள் மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக தெரிவித்ததின் பேரில் முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று 3,217 கோடி அளவிற்கு உத்தேசிக்கப்பட்ட கட்டண உயர்வு புகாரின் அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வைப் பொறுத்தவரை 60 சதவிகிதத்திற்கும் மேல் சராசரியாக உயர்த்தப்பட்டது ஆனால் தற்போது 20 முதல் 24 விழுக்காடு மட்டுமே அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: