×

எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் வீடு, டெண்டர் எடுத்த நிறுவனங்களில் இருந்து கைப்பற்றிய 436 ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

சென்னை: ரூ.500 கோடி டெண்டர் ஊழல் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரி தொடங்க மோசடியாக அனுமதி வழங்கியது தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 44 இடங்களில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட 436 ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், முன்னாள் அமைச்சர்களின் 6 வங்கி லாக்கர்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, 2015 முதல் 2018ம் ஆண்டு வரை பழைய தெரு விளக்குகளுக்கு பதில் புதிய எல்இடி விளக்குகள் பொருத்தும் டெண்டர் விடப்பட்டது. அதில், மின்சார துறையில் முன் அனுபவம் இல்லாத தனது நண்பர்கள் மற்றும் பினாமிகளின் நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்துள்ளார். அதன் முலம் தமிழக அரசுக்கு ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது. காரணம், சந்தை விலையை விட அதிக விலை நிர்ணயித்து எல்இடி பல்புகள் வாங்கி உள்ளாக கணக்கு காட்டியுள்ளனர்.

அதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் எஸ்பி.வேலுமணி மற்றும் நண்பர்களான சந்திரபிரகாஷ், சந்திரசேகர், சீனிவாசன், ராஜன், ராதாகிருஷ்ணன், விஜயகுமார் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதைத் ெதாடர்ந்து இந்த பத்து பேரின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர்களின் பினாமிகளின் வீடுகள் உள்பட தமிழகம் முழுவதும் 31 இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், சோதனையில் ரூ.32.98 லட்சம் ரொக்கம், 1,228 கிராம் நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள் 10 சொகுசு கார்கள், மேலும், பினாமிகள் பெயரில் உள்ள 316 சொத்து ஆவணங்கள், 2 வங்கி பெட்டக சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர், 2020ம் ஆண்டு தனது பதவி காலத்தில் , திருவள்ளூர் ஊத்துக்கோட்டை மஞ்சக்காரணையில் செயல்பட்டு வரும் வேல்ஸ் தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 150 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்க கோரி கொடுத்த மனுவின் மீது உரிய கவனம் செலுத்தாமல், மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று தேசிய மருத்துவ குழுமத்துக்கு சான்று கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக பணப்பயன்களை விஜயபாஸ்கர் தரப்பு பெற்றுள்ளது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேல்ஸ் மருத்துவக்கல்லூரி டிரஸ்டி ஐசரி கணேஷ், சான்று ெகாடுத்த மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் அவர் தொடர்புடைய நபர்கள், வீடு, கல்லூரி என 13 இடங்களில் சோதனை நடந்தது.
அந்த சோதனையில், ரூ.18.37 லட்சம் ரொக்கம், 1,872 கிராம் தங்கம் நகைகள், 8.28 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வழக்கு தொடர்பான 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 ஐ-போன்கள், 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த சோதனையில் மொத்தம் ரூ.51.35 லட்சம் ரொக்கம், 3.10 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி பொருட்கள், வழக்கு தொடர்பான 436 ஆவணங்கள், 4 வங்கி பெட்டக சாவிகள், 10 சொகுசு கார்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதில் குறிப்பாக பறிமுதல் செய்யப்பட்ட 436 ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மதிப்பீடு அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வில், எல்இடி டெண்டர் எடுத்த நிறுவனங்களில் இருந்து பல கோடி ரூபாய் பணம் எஸ்.பி.வேலுமணிக்கும் அவரது பினாமி நிறுவனங்களுக்கும் அனுப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளது. அதன் மூலம் கிடைத்த பணத்தை பினாமி பெயர்களில் முதலீடு செய்து அந்த பணத்தை வருவாயாக கிடைத்த பணமாக கணக்கு மாற்றி உள்ளனர். இதுதவிர எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 6 வங்கி பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சி.விஜயபாஸ்கர் பெற்றோர் வீடு மற்றும் அவரது வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு சிடி, ஒரு பென் டிரைவ், 2 ஐ-போன்களை ஆய்வு செய்த போது, வழக்கு தொடர்பான முக்கிய தகவல்கள் இருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதேநேரம் சில ஆவணங்கள் அழிக்கப்பட்டள்ளது. எனவே, அழிக்கப்பட்ட ஆவணங்களை மீண்டும் மீட்க தடயவியல் துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட 436 ஆவணங்களையும் முழுமையாக கணக்காய்வு செய்ய 2 நாட்கள் ஆகும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகே இரண்டு அமைச்சர்களும் எத்தனை கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர் என தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : S.P.Velumani ,C.Vijayabaskar Veedu , S.P. Velumani, C.Vijayabaskar House, Scrutiny of 436 documents seized from the tendering companies started
× RELATED ரெய்டில் சிக்கிய 50 லட்சம், 316 முக்கிய...