முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று நரிக்குறவர், குருவிக்காரர்கள் பழங்குடி பட்டியலில் சேர்ப்பு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க  பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நரிக்குறவர்கள், குருவிக்காரர்கள் சமூகத்தினரின் மேம்பாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். இவர்களின் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அவர், சமீபத்தில் நரிக்குறவர்களின் வீடுகளுக்கு சென்று உணவு அருந்தினார். அந்த பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகளை சந்தித்து பேசினார்.

இதனால், அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி ஒன்றிய அரசுக்கு கடந்த மார்ச்சில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், தமிழகத்தில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி கடந்த 1965 முதல் வைக்கப்பட்ட கோரிக்கை, தற்போதுதான் நிறைவேறி உள்ளது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறுகையில், ‘சட்டீஸ்கரில் 12 சமுதாயங்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இமாச்சல பிரதேசத்தின் ஹட்டி சமுதாயத்தினரை இப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், கர்நாடகாவில் பெட்டா குருபா இனத்தினரையும் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது,’’ என்றார். ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டதை தொடர்ந்து, இந்த பிரிவினர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான தீர்மானத்தை அந்தந்த மாநிலங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றி, இதை அமல்படுத்தலாம்.

Related Stories: