×

இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரஷ்யா, மியான்மர் உள்ளிட்ட 3 நாடுகளுக்கு அழைப்பில்லை: 10 லட்சம் பேர் அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்ப்பார்ப்பு

லண்டன்: லண்டனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், ராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க, ரஷ்யா உட்பட 3 நாடுகளுக்கு இங்கிலாந்து அரசு அழைப்பு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். இவரது இறுதி சடங்கு வரும் 19ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெற உள்ளது. அரச குடும்பத்தினர் மற்றும் ஸ்காட்லாந்து மக்கள் அஞ்சலி செலுத்த எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட்ஹவுஸ் அரண்மனையில் கடந்த 11ம் தேதி உடல் வைக்கப்பட்டது. அங்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணியின் உடல் நேற்று முன்தினம் பிற்பகல் லண்டனுக்கு ராயல் விமானப்படை விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், ராணி உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, ராணியின் உடல் பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு ராணுவ மரியாதையுடன் பக்கிங்காம் அரண்மனையில் இருந்து, வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு 2 கிமீ ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. சவப்பெட்டியின்  மீது அவர் வழக்கமாக அணியும் கோஹினுர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடம், செங்கோல் வைக்கப்பட்டு இருந்தன. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வைக்கப்பட்ட உடலுக்கு, மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 3 நாட்களாக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வரிசையாக சென்று ராணிக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வரும் 19ம் தேதி காலை 6.30 வரை மக்கள் அஞ்சலி செலுத்தலாம். இதில், 10 லட்சம் பேர் அஞ்சலி செலுத்துவார்கள் என்று தெரிகிறது.

ரஷ்யாவுக்கு அழைப்பில்லை
* ராணியின் இறுதிச்சடங்கில் 500க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். ஆனால், ரஷ்யா, பெலராஸ், மியான்மர் நாட்டு தலைவர்களுக்கு இங்கிலாந்து அரசு அழைப்பு விடுக்கவில்லை.
* குஜராத்தை சேர்ந்த ஓவிய கலைஞர்கள் ஜிக்னேஷ், யாஷ் பட்டேல் ஆகியோர் மேற்கு லண்டனில் வசித்து வருகின்றனர். இருவரும் ராணியின் படத்தை பெரியளவிலான முரல் பெயிண்டிங்கில் உருவாக்கி வருகின்றனர்.

Tags : Russia ,Myanmar ,UK ,Queen , 3 countries including Russia, Myanmar not invited to attend UK Queen's funeral: 1 million mourners expected
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!