×

கரூர், ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்க வேண்டும்

*60 ஆண்டுகள் கடந்த பழைய பாலத்தில் மின்விளக்கு வசதி

*பொதுமக்கள் கோரிக்கை

க.பரமத்தி : கரூர் ஈரோடு இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட வேண்டும். தற்போதுள்ள பாலத்திற்கு மின்விளக்குகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர், கொடுமுடி செல்லும் நெடுஞ்சாலையில் 21 கி.மீ. தொலைவில் நொய்யல் குறுக்கு சாலை பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இதன் அருகே கரூர், ஈரோடு மாவட்டங்களின் எல்லைப்பகுதியாக விளங்குவது நொய்யல் குறுக்கு சாலையில் நொய்யல் ஆற்றுப்பாலம் உள்ளது. இந்த பாலமானது. 1955ம் ஆண்டு ரூ.3.21 லட்சத்தில் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு கட்டிட பணிகள் தொடங்கி பாலம் கட்டி முடிக்கப்பட்டு உடனடியாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த பாலத்தில் அன்று முதல் இன்று வரை மின் விளக்குகள் அமைக்கப் படவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த பாலத்தின் வழியாக வரும் அரசு பேருந்து தனியார் பேருந்துகள் டுரிஸ்ட் வேன்கள் மினி லாரிகள் லோடு ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் திருச்சி, மற்றும் கரூர் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மட்டும் அல்லாது சேலம் மற்றும் நாமக்கல் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளும், இரவில் நடந்து செல்லும் பொது மக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் தென்னிலை பகுதியில் இயங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரஷர் மற்றும் கல்குவாரிகளில் இருந்து வெடி வைத்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களை கிரஷர் மூலம் அரைக்கப்பட்டு அரை, முக்கால், ஒன்றரை, சிப்ஸ் என பல வகைகளில் பிரித்து தயாரிக்கப்பட்டு இங்கு தயாரிக்கப்படும் கிரஷர் ஜல்லி கற்களை கிழக்கு மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட பல்வேறு பகுதிகளுக்கு வீடு, கடைகள், கட்டவும் தார்சாலை அமைக்கவும் பயன்படுத்த இப்பகுதியிலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான டாரஸ் மற்றும் லாரிகளில் செல்ல வேண்டிய இடங்களுக்கு கிரஷர் ஜல்லி பாரம் ஏற்றி கொண்டு இந்த நொய்யல் பாலம் வழியாக செல்கின்றனர்.

நொய்யல் ஆற்று பாலமானது 60 ஆண்டுகளுக்கு மேலாக மின் விளக்குகள் இல்லாததால் இந்த பாலத்தை பொதுப்பணித்துறையினர் கண்டு கொள்ளவில்லை என பொது மக்கள் இந்த வழியாக செல்லும் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இரவு வேளையில் இருள் நிறைந்து காணப்படும் இந்த பாலத்தின் வழியாகச் செல்வோரிடம் வழிப்பறி கொள்ளை நடக்க வாய்ப்புள்ளது. மேலும் பாலத்தின் மேல் பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால், பாலத்தின் அடியில் செல்லும் ஆற்றுப் பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுவதாக மக்கள்பலர் குறை கூறுகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிலர் கூறுகையில், இந்த பாலம் கட்டப்பட்டு 60ஆண்டுகள் கடந்து விட்டது.

இதன் தடுப்பு சுவர்களில் உள்ள கான்கிரீட்கள் பல்வேறு இடங்களில் உதிர்ந்து காணப்படுகிறது. எனவே இதனை சீரமைத்து பாலம் பகுதியில் இரவில் வெளிச்சம் இன்றி இருள் நிறைந்து காணப்படுவதால் பாலத்திற்கு அடியில் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் அதோடு குறுகிய பாலமாக உள்ளதால் இரவு நேரத்தில் பாலத்தை கடக்கும் போது சைக்கிளில் செல்வோர் பலரும் சற்று பயத்துடன் கடக்க வேண்டியுள்ளது என்கின்றனர்.

எனவே கரூர், ஈரோடு இரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கவும் தற்போது உள்ள பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும் என இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கின்றனர்.

Tags : Noel ,Karur ,Erode , K. Paramathi: A new bridge should be built across the Noyal river to connect the two districts of Karur and Erode.
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு