குன்னூர் நகராட்சியில் மழை நீரில் பெயர்ந்த தார்சாலை ஜல்லி கற்கள்-பொதுமக்கள் வேதனை

குன்னூர் :  குன்னூர் நகராட்சியில், மாடல் ஹவுஸ் பகுதியில் நகராட்சி சார்பில் ரூ. 22 லட்சம் நிதியில் போடப்பட்ட தார் சாலையில் ஜல்லிக்கற்கள் மழைநீரில் பெயர்ந்ததை கண்டு அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர். குன்னூர் நகராட்சிக்கு உட்பட்டது 20வது வார்டு மாடல் ஹவுஸ் பகுதி. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பிரதான சாலை கடந்த சில நாட்களாக பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் டூவீலர்கள் மற்றும் ஆட்டோக்கள் அவ்வழியே செல்ல முடியாத அவலம் நிலவுகிறது. இந்நிலையில் அண்மையில் நகராட்சி சார்பில் ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரவோடு இரவாக சாலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்தது.

ஆனால் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சாலை முழுவதுமாக அடித்து செல்லப்பட்டு, ஜல்லி கற்கள் பெயர்ந்து விட்டது. இதையடுத்து இந்த தார் சாலை தரமின்றி போடப்பட்டுள்ளதாக, அப்பகுதி வார்டு உறுப்பினர் வசந்தி நகராட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு தெரிவித்தார். இதையடுத்து, இதுபோல தரமற்ற சாலையை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீண்டும் மாடல் ஹவுஸ் பகுதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் மக்கள் வரிப்பணத்தை கொண்டு நகராட்சி சார்பில் பணிகள் நடக்கும்போது உரிய அதிகாரிகள் அருகில் இருந்து பணிகளை கண்காணிக்க வேண்டும். இத்தகைய தரமற்ற சாலையை இப்பகுதியில் அமைத்த ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நிதியை வழங்கக்கூடாது எனவும் சமூக ஆர்வலர்கள் குன்னூர் நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: