×

மின் கட்டண உயர்வு விவகாரம் தமிழக அரசு கேவியட் மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: மின் கட்டண உயர்வு விவகாரத்தில் யாரேனும் மேல்முறையீடு செய்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம்’ என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழகத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், ‘மின்கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்க தடை விதிக்க வேண்டும்’ என தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தனிநீதிபதி அமர்வு, ‘‘தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறையை சேர்த்தவர் கண்டி ப்பாக இருக்க வேண்டும். அவரை நியமிக்கும் மின் கட்டண உயர்வு கோரிக்கை மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. அதே நேரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தலாம்’’ என உத்தரவிட்டிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் சார்பில் மீண்டும் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, மின் கட்டண உயர்வு தொடர்பான தமிழக அரசாணை செல்லும் என பல்வேறு கோரிக்கைகள் கொண்ட உத்தரவை கடந்த மாதம் பிறப்பித்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான குமணன் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘தமிழக மின் கட்டண உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம்’ என தெரிவித்துள்ளார். இதே போல் தமிழக நூற்பாலைகள் சங்கங்கள் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Tamil Nadu Government Caveat ,Supreme Court , Tamil Nadu Government Caveat Petition on Electricity Tariff Hike: Filed in Supreme Court
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...