×

ஏடிஎம் மையம் செல்பவர்களின் கவனத்தை திசை திருப்பி ஏடிஎம் கார்டுகளை மாற்றி பணம் கொள்ளையடித்த ஆவடி டேங்க் பேக்டரி ஊழியர் அதிரடி கைது: 40 சிசிடிவி கேமராக்கள் துப்பு துலங்கியது: 270 திருட்டு கார்டுகள் சிக்கின

சென்னை: ஏடிஎம் மையம் செல்பவர்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்களது ஏடிஎம் கார்டு மற்றும் பின் நம்பரை பயன்படுத்தி, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பணம் திருடிய ஒன்றிய அரசு ஊழியரை எம்.கே.பி.நகர் போலீசார் 40 சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கைது செய்தனர். அவரிடம் இருந்து 270 திருட்டு ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை எம்.கே.பி நகர் கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜாக்குலின்(24). இவர் அம்பத்தூரில் உள்ள ஐடி கம்பெனியில் பணி செய்து வருகிறார். கடந்த 6ம் தேதி எம்கேபி நகர் அம்பேத்கர் கல்லூரி சாலை எதிரே உள்ள ஏடிஎம்மில், தனது புதிய ஏடிஎம் கார்டை ‘ஆக்டிவேட்’ செய்ய முயன்றும் முடியாமல் அவதிப்பட்டார். அப்போது, ஜாக்குலின் பின்னால் நின்றிருந்த 40 வயது நபரிடம் கார்ட்டை ஆக்டிவேட் செய்த தரக்கோரினார். அவர் ஆக்டிவேட் கொடுத்த சில விநாடிகளில் அங்கிருந்து மாயமானார். அடுத்த சில மணிநேரத்தில், மொபைல் போனுக்கு ரூ.40 ஆயிரம் எடுத்தது போன்று எஸ்எம்எஸ் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாக்குலின் உடனடியாக தான் வாடிக்கையாளராக உள்ள வங்கியை தொடர்பு கொண்டு பிரச்னையை விளக்கினார். பணம் எடுத்த ஏடிஎம் மற்றும் பிற விவரங்களை தெரிவித்து, போலீசில் புகார் கொடுக்க அறிவுறிறுத்தினர். அப்போதுதான், ஜாக்குலின் தன்னிடம் இருப்பது புது ஏடிஎம் கார்டு தன்னுடையது இல்லை. அது, அதே வங்கியைச் சேர்ந்த வேறு ஒரு நபரிருக்கு சொந்தமானது என்பது பெயரை வைத்து கண்டுபிடித்தார். இதனையடுத்து ஜாக்குலின் இதுகுறித்து எம்.கே.பி நகர் போலீஸ் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இது குறித்து தீவிரமாக விசாரிக்கும்படி புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் எம்.கே.பி நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் கார்டு ஆக்டிவேட் செய்த ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மாஸ்க் அணிந்த 40 வயது நபர் ஜாக்குலினுக்கு உதவி செய்வது போன்று, தனது பாக்கெட்டில் இருந்த மற்றொரு ஏடிஎம் கார்டை ஏமாற்றி கொடுப்பது தெரியவந்தது. மர்ம நபரின் வாகனம் பெரம்பூர் பாரதி ரோடு பகுதியில் வசித்து வரும் பிரபு(55) என்பவருக்கு சொந்தமானது என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். இந்நிலையில், நேற்று காலை எம்.கே.பி நகர் இன்ஸ்பெக்டர் வர்கீஸ் தலைமையிலான போலீசார் அவரது வீட்டிற்குள் சென்று பிரபுவை கைது செய்தனர். மேலும் கடைசியாக ஜாக்குலினிடம் இருந்து திருடப்பட்ட ஒரு ஏடிஎம் கார்டு அவரது சட்டை பாக்கெட்டில் இருந்தது.

ஆக மொத்தம் 271 ஏடிஎம் கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், திருடிய ஏடிஎம் கார்டை வேறு ஏடிஎம் மையத்தில் போட்டு பணம் எடுப்பதும் தெரியவந்தது. இதற்காக எந்த வங்கி ஏடிஎம்மில் நபர்களை ஏமாற்ற நினைத்துள்ளாரோ, அந்த வங்கியின் திருட் ஏடிஎம் கார்டு எடுத்து செல்வாராம். காரணம், 2ம் ஒரே நிறுத்தில் இருப்பதால் யாருக்கும் சந்தேகம் வராது என்பது தானாம். இவர் ஆவடி மத்திய அரசு நிறுவனமான ஆவடி டேங்க் பேக்டரியில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வருவதும், இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு மகன் மகள் உள்ளதும் தெரியவந்தது.

தொடர்ந்து இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு பொதுமக்களை ஏமாற்றி 271 ஏடிஎம் கார்டுகளுடன் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கைவரிசை காட்டிய நபர் கடைசியாக எம்கேபி நகர் காவல் நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

*ஏடிஎம் மையம் முதல் வீடு வரை 40 சிசிடிவி கேமரா ஆய்வு

ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது பிடிபட்ட பிரபு ஏடிஎம் மையம் வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் 10 மீட்டர் தூரம் தள்ளி தனது ஆக்டிவா இருசக்கர வாகனத்தை நிறுத்தியது தெரியவந்தது. அவர் அந்த வண்டியை எடுத்துக்கொண்டு அவர் வீடு வரை உள்ள 40 சிசிடிவி கேமரா பதிவுகளை தொடர்ந்து போலீசார் கண்காணித்துள்ளனர். ஒவ்வொரு கேமராவிலும் அவர் செல்வது தெரியவந்தது. ஆனால் வண்டியின் எண் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக அந்த சிசிடிவி கேமரா பதிவுகள் பெரம்பூரில் ஒரு பகுதியில் நின்றுள்ளது. அப்பகுதி மக்களிடம் காண்பித்தபோது குறிப்பிட்ட நபர் அந்த வீட்டில் இருப்பதை அவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். அதன் பிறகு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

*அதே கார்டு... அதே ஏடிஎம்...

பிடிப்பட்ட நபர் உதாரணமாக இந்தியன் வங்கி ஏடிஎம்க்கு செல்வதாக இருந்தால் அதே இந்தியன் வங்கி ஏடிஎம் கார்டுகளை கையில் எடுத்துச் செல்வார். வேறு வங்கியில் இருந்து குறிப்பிட்ட முறைகளுக்கு மேல் பணம் எடுத்தால் பணம் பிடித்தம் செய்யப்படுவதால் பெரும்பாலான நபர்கள் அதே வங்கியில் பணம் எடுக்கின்றனர். அப்போது ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்தால் அவர்களுக்கு சந்தேகம் வரும் என்பதால் எந்த வங்கிக்கு ஏமாற்ற செல்கிறாரோ அதே வங்கி ஏடிஎம் கார்டுகளை இவர் கொண்டு சென்றுள்ளார். மேலும் இதற்காக ஏடிஎம் வங்கியில் தவற விடப்படும் கார்கள் மற்றும் குப்பைகள் கிடக்கும் பழைய பயன்படாத ஏடிஎம் கார்டுகளை சேகரித்து தனியாக வைத்துள்ளார்.

*துணை கமிஷனர் அறிவுரை

புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன் கூறுகையில், `ஏடிஎம் மையங்களுக்கு செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் மற்றவர்கள் உதவிகளை நாடுகின்றனர். அந்த நேரத்தில் பணம் எடுத்தால் போதும் என்ற நோக்கத்தில் அவர்களது செயல்பாடுகள் உள்ளது. ஆனால் நமக்கு உதவி செய்பவர்கள் யார் என்பதை அவர்கள் அறிவது கிடையாது. எனவே நம்பிக்கையான நபர்களிடம் மட்டுமே உதவி கேட்க வேண்டும் என்பதை பொதுமக்கள் முதலில் அறிய வேண்டும். அதேபோன்று பணம் எடுக்கும் போது, பணம் என்னும் போது நமது கவனத்தை திசை திருப்பி எளிதாக ஒரு நிமிடத்தில் பெண்கள் மற்றும் முதியவர்களை திருடர்கள் ஏமாற்ற கூடும். எனவே முடிந்தவரை குடும்பத்தில் உள்ளவர்களின் உதவியோடு பணத்தை எடுப்பது பாதுகாப்பானது’ என தெரிவித்தார்.

*மகள் திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க திருட்டு

பிடிபட்ட பிரபுவிடம் போலீசார் விசாரணை செய்தபோது கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தனது மகளுக்கு 25 சவரன் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மேலும் மூன்று வங்கியில் கடன் வாங்கி உள்ளார். தான் வேலை செய்யும் இடத்தில் மூன்று பேரிடம் வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். இதனால் மாதம் வட்டி மற்றும் இஎம்ஐ சேர்த்து ரூ.60 ஆயிரம் கட்ட வேண்டிய சூழல் இருந்தது. இதனால் இந்த முடிவுக்கு வந்துள்ளார். கடந்த 6 மாதமாகவே இந்த தொழிலை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



Tags : Avadi Tank Factory , Avadi Tank Factory employee arrested for diverting attention of ATM center goers and stealing money by changing ATM cards: 40 CCTV cameras caught: 270 stolen cards caught
× RELATED ஆவடி அருகே 600 போதை மாத்திரை, 4 கிலோ கஞ்சா பறிமுதல்