×

ராணிப்பேட்டை அருகே ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளம்: ஏரி கால்வாயில் பிடித்த ராட்சத மீன்களை எடைபோட்டு விற்ற வாலிபர்கள்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னப்பந்தாங்கல் அருகே ஏரிக்கால்வாயில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளத்தில் பிடித்த ராட்சத மீன்களை வாலிபர்கள் அங்கேயே எடைபோட்டு விற்றனர். அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, காவேரிப்பாக்கம், சோளிங்கர், அரக்கோணம் ஆகிய இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

காலையில் சுட்டெரிக்கும் வெயிலும், இரவு நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் ராணிப்பேட்டை பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓடைக் கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்படும் மழைநீரானது ஏரி, குளங்களை நிரப்பி வருகிறது. இவை முழுமையாக நிரம்பிய நிலையில் நீர்வரத்து கால்வாய்கள் மூலமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாவட்டத்தின் பெரிய ஏரியான காவேரிப்பாக்கம் ஏரிக்கு உபரிநீர்  திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் காவேரிப்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏரி ஓடைக்கால்வாய்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்படி, பொன்னப்பந்தாங்கல் அருகே வாங்கூர் கூட்ரோடு பகுதியில் உள்ள ஓடைக்கால்வாயில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளநீரில் ஏராளமான பொதுமக்கள் நேற்று ஆர்வத்துடன் மீன் பிடித்தனர்.
இதில் கெண்டை, ஜிலேபி, ஏரி வவ்வால், ராட்சத அணை மீன் போன்ற மீன் வகைகளை வலை விரித்து பிடித்து சென்றனர். இதனைக் காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்ததால் மீன் சூரைக்கொள்ளை திருவிழா போல காட்சியளித்தது. பிடிக்கப்பட்ட மீன்களை வாலிபர்கள் அங்கேயே எடைபோட்டு விற்பனை செய்ததால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து வாங்கூர்  ஓடைக்கால்வாய் மூலமாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் வலை விரித்து பிடித்தனர். இதில் ஏராளமான மீன் வகைகளை வலையில் சிக்கியது. அதில், ஒரு கிலோ அளவு எடைகொண்ட ஜிலேபி, அணை மீன், கெண்டை, ஏரி வவ்வால் ஆகியவை  கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு மீனும் 6 முதல் 7 கிலோ வரை பிரஷ்ஷாக கிடைப்பதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாக தெரிவித்தனர்.


Tags : Ranipet , Ranipet, raging flood, lake channel
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...