×

விருதுநகரின் நிலத்தடி நீராதாரத்தை பெருக்க கௌசிகா ஆற்றில் 2 தடுப்பணைகள் கட்ட வேண்டும்: தூர்வாரி கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

விருதுநகர்: விருதுநகரின் நிலத்தடி நீராதாரமாக திகழும் கௌசிகா ஆற்றில் இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்டி, தூர்வாரி கழிவுநீர் கலப்பதை தடுத்து மாசுபடும் நீர்நிலையை பாதுகாக்க வேண்டும். கௌசிகா ஆற்று தண்ணீர் தேங்கும் குல்லூர்சந்தை அணையை தூர்வாரி மராமத்து செய்து, பாசனத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி, பேரையூர், எழுமலை, குச்சம்பட்டி வையூர் பகுதிகளில் உள்ள கிராம கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீரும், காட்டுப்பகுதிகளில் பெய்யும் மழைநீரும் வடமலைக்குறிச்சி கண்மாய்க்கு வந்து சேர்கிறது. இந்த கண்மாய் நிரம்பி வெளியேறும் உபரி நீர், கௌசிகா ஆறாக மாறி சின்னமூப்பன்பட்டி, மீனாட்சிபுரம், விருதுநகரின் உள்பகுதியில் உள்ள அகமது நகர், பர்மா காலனி, அன்னை சிவகாமிபுரம், பாத்திமா நகர், ஆத்துமேடு வழியாக குல்லூர்சந்தை அணைக்கு சென்று தேங்குகிறது. நதிகள், ஆறுகளைப் போல கௌசிகா ஆறு மலைகளில் இருந்து உருவாகவில்லை என்றாலும் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரில் உருவானது.

விருதுநகர் மற்றும் கிராமங்களின் நிலத்தடி நீராதாரமாக இன்றும் திகழ்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கௌசிகா நதிநீர் விருதுநகர் பகுதி மற்றும் நதி ஓடும் பகுதி கிராம மக்கள், கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. ஆனால், தற்போது விருதுநகர் நகராட்சியில் உள்ள சிவஞானபுரம், பாவாலி, கூரைக்குண்டு, ரோசல்பட்டி, குல்லூர்சந்தை ஊராட்சிகள் மற்றும் வழித்தட கிராமங்களின் கழிவுநீர் கலக்கும் கழிவுநீர் ஓடையாகி விட்டது. கௌசிகா ஆற்றின் கரையோரங்களில் கட்டிட ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து விட்டன.

தரிசாக கிடக்கும் 2,463 ஏக்கர் நிலங்கள்:
விருதுநகர் நகராட்சியில் பாதளாச்சாக்கடை திட்டம் கடந்த 16 ஆண்டுகளாக நடந்து வருகிறது. நகராட்சியில் உள்ள 22 ஆயிரம் குடியிருப்புகளின் கழிவுநீரும், சுற்றுப்பகுதி ஊராட்சிகளில் உள்ள 30 ஆயிரம் குடியிருப்புகளின் கழிவுநீரும் கௌசிகா ஆற்றில் கலந்து வருகிறது. இதனால், கௌசிகா ஆறும், குல்லூர்சந்தை அணையும் கழிவுநீர் குளமாக மாறி வருகிறது. அணையின் மூலம் பாசன வசதி பெறும் 2,463 ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கிறது.

அதிமுக ஆட்சியில் அரைகுறை பணி:
அதிமுக ஆட்சியில் கடந்த 2013ல் கௌசிகா ஆற்றை தூர்வார ஒதுக்கிய ரூ.3 கோடி நிதியில் முட்களை மட்டும் அகற்றிவிட்டு, விட்டுவிட்டனர். அதன்பின் 2020 அதிமுக ஆட்சியில், அணையை தூர்வாரி மராமத்து செய்ய ஒதுக்கிய ரூ.6.50 கோடி நிதியில் அரைகுறையாக கரைகளை மட்டும் மராமத்து செய்து நிதியிழப்பு ஏற்படுத்திவிட்டனர். இந்நிலையில், கௌசிகா ஆற்றை தூர்வார வேண்டும். விருதுநகர் நகராட்சி, சுற்றுப்பகுதி ஊராட்சிகளின் கழிவுநீர் கலக்காமல், விருதுநகர் நகராட்சி பாதளாச்சாக்கடை இணைப்புகளில் இணைத்து சுத்திகரிப்பு செய்து, தண்ணீரை தூய்மைப்படுத்தி விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நிலத்தடி நீரை உயர்த்த தடுப்பணைகள்:
விருதுநகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த கௌசிகா ஆற்றில் 2 இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். தடுப்பணை நீரிலிருந்து விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதி ஊராட்சிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கௌசிகா ஆற்றில் பட்டம்புதூர் குப்பாம்பட்டி அருகில் தடுப்பணை கட்ட ரூ.2.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது மறுமதிப்பீடு செய்து ரூ.3.15 கோடி நிதி கோரி அனுப்பப்பட்டுள்ளது. விருதுநகர் பகுதியில் தடுப்பணை ரூ.3.50 கோடியில் கட்ட பரிந்துரைகள் அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜயமுருகன் கூறுகையில், ‘கௌசிகா ஆறு 30 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் ஆதாரமாகவும், பல ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கும் பயன்பட்டு வந்தது. தற்போது கழிவுநீர் கலப்பால் குல்லூர்சந்தை அணை தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அணையின் மூலம் பாசன வசதி பெறும் 2,463 ஏக்கர் நிலமும் தரிசாக கிடக்கிறது. கெளசிகா ஆற்றை தூர்வாரி, விருதுநகர் பகுதியில் தடுப்பணை கட்டவும், நகராட்சி, ஊராட்சிகளின் கழிவுநீர் கலப்பை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கெளசிகாவில் தடுப்பணைகள் கட்டினால், நிலத்தடி நீர் உயரும். நகரின் குடிநீர் மற்றும் பிற பயன்பாட்டிற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Varudunagar ,Kausica river ,Dirwari , Virudhunagar, ground water, 2 barrages in Kausika river to prevent mixing of Durwari sewage
× RELATED ஆடிப்பூரத்தை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி