×

.சென்னை அருகே மேலக்கோட்டையூரில் ஐஐஐடி 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழா: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

சென்னை: சென்னை அருகே மேலக்கோட்டையூரில் நேற்று நடந்த ஐஐஐடி 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். சென்னை அருகே மேலக்கோட்டையூரில் இந்திய தகவல் தொழில் நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனம் (ஐஐஐடிடிஎம்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 10ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. நிறுவனத்தின் இயக்குனர் சோமயாஜுலு தலைமை தாங்கினார். நிர்வாக  குழுத்தலைவர் சடகோபன் வரவேற்றார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக்கொண்டு 6 பேருக்கு பி.எச்.டி., 53 பேருக்கு எம்.டெக், 110 பேருக்கு இரட்டை பட்டம், 211 பேர் பி.டெக் பட்டங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

 பல்வேறு சமூக, பொருளாதார நிலைகளில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு புதிய உயரத்தை அடைந்துள்ளனர். தரமான கல்வி, சிறந்த ஆசிரியர்கள் ஆகியவை இந்த நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கிருந்து படித்து முடித்து விட்டு வரும் மாணவர்கள் திறமையாளர்களாக இருக்கின்றனர். சுதந்திர தின கொடியேற்றத்தின் போது பிரதமர் மோடி, ஜெய் ஜவான், ஜெய் கிசான் ஆகிய வழக்கமான இரு முழக்கங்களோடு ஜெய் விக்யான், ஜெய் ஹன்சந்தான் ஆகிய புதிய முழக்கங்களை அறிமுகப்படுத்தினார்.

ஜெய் விக்யான் என்றால் விஞ்ஞானத்தையும், ஜெய் ஹன்சந்தான் என்றால் புதிய தொழில் நுட்பத்தையும் போற்ற வேண்டும் என்பதாகும். அரசும் அதை நோக்கித்தான் பயணிக்கிறது. இனி அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்த இரு சொற்களைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும். இனி அறிவியலுக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும்தான் காலம். எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கை காரணமாக இந்தியா உற்பத்தி மற்றும் வடிவமைத்தல் பிரிவுகளில் மிகச்சிறந்த உயரத்தை அடையும். 2028ம் ஆண்டிற்குள் வேலை செய்வோர் எண்ணிக்கையில் நாம் சீனாவை விஞ்சுவோம். 2036ம் ஆண்டிற்குள் இது 65 சதவீதம் உயரும். உங்களுக்கெல்லாம் சிறந்த எதிர்காலம் உள்ளது.

 உலக அளவில் 100 முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு காப்புரிமை கேட்டு 42000 விண்ணப்பங்கள் வந்தன. இந்த 2022ம் ஆண்டு 66400 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதிலிருந்தே நமது பலத்தை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். குழந்தைகளை படிக்க வைத்து இந்த நிலைக்கு உயர்த்திய பெற்றோரின் கஷ்டங்களை நான் உணர்வேன். அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : .IIIT 10th ,graduation ceremony ,Melakottaiyur ,Chennai ,Finance Minister ,Nirmala Sitharaman , .IIIT 10th year graduation ceremony at Melakottaiyur near Chennai: Finance Minister Nirmala Sitharaman attends
× RELATED சீனாவில் இருந்து வெளியேறும்...