×

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது: சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் நாளை (செப். 12) முதல் ரயில்களில் முன்பதிவு செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மக்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா ஆண்டுதோறும் ஜனவரி 14ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்படும். பொதுமக்கள் தங்களது வீடுகளில் பொங்கல் வைத்து சூரிய பகவானிற்கு படைத்து மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். மேலும் ஏழை, எளிய மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் அரசு பொங்கல் பரிசு வழங்கும்.

இந்நிலையில், தொடர் விடுமுறை காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். சாதாரணமாக விடுமுறை நாட்களிலேயே சொந்த ஊருக்கு செல்ல நீண்ட நேரம் காத்திருப்புக்கு பிறகுதான் இருக்கை வசதி கிடைக்கும். ஆனால், பொங்கல் விழா அப்படி இல்லை. அதற்காக முன்பதிவு செய்தால் மட்டுமே ரயில்களில் டிக்கெட் கிடைக்கும். எனவே, பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக ரயில்களில் முன்பதிவு நாளை (12ம் தேதி) முதல் தொடங்க இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 10ம் தேதி ரயில் பயணம் செய்ய விரும்புபவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்ல திட்டமிடுபவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, முன்பதிவு துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும். அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால் தேவையான வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றனர்.

Tags : Pongal , Pongal Festival Celebration Train Ticket Booking Starts Tomorrow: Special Trains Operation Scheme
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா