ஆலந்தூர்: நந்தம்பாக்கத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில் கொரோனா தொற்று கணக்கெடுப்பு ஒப்பந்த பெண் ஊழியர் பரிதாபமாக பலியானார். முன்களப் பணியாளர் என்ற அடிப்படையில் அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்துகின்றனர். சென்னை நந்தம்பாக்கம், ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி தரணி (27). இவர், நந்தம்பாக்கம் 158-வது வட்ட மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தொற்று கணக்கெடுப்பு ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு மகன் ராகுல் (9), மகள் கவிதா (8) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி நந்தம்பாக்கம், பத்மினி கார்டன் பகுதியில் வீடு வீடாக சென்று, கொரோனா தொற்று கணக்கெடுப்பு பணியில் தரணி ஈடுபட்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த ஒரு மரம் திடீரென சாய்ந்து, தரணி மீது விழுந்துள்ளது. இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை தரணி பரிதாபமாக பலியானார். இதுகுறித்த புகாரின்பேரில் நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை மாநகராட்சியில் தரணி ஒப்பந்த அடிப்படையில் இருந்தாலும், கொரோனா தொற்று தடுப்பு பணியில் முன்கள பணியாளராக வேலை செய்ததால், அவருக்கு முன்கள பணியாளர்களுக்கான நிவாரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது….
The post கொரோனா கணக்கெடுப்பு பணியின்போது மரம் விழுந்து முன்கள பெண் ஊழியர் பலி: நந்தம்பாக்கத்தில் பரிதாபம் appeared first on Dinakaran.