×

கட்டிட வேலை செய்வது போல் நடித்து புறநகர் பகுதியில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் கைது

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், லட்சுமி நகரில் புதிதாக அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அங்கு கட்டிட பணியில் ஈடுபடும் வட மாநில இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீசார் மாறுவேடத்தில் சம்பவ இடத்திற்கு சென்று, வட மாநில இளைஞர்களிடம் கஞ்சா வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போது அவர்கள், கஞ்சா காலியாகிவிட்டது என கூறி அம்பத்தூரில் இருக்கும் நண்பரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கஞ்சாவை வரவழைத்தனர். இதில், கஞ்சாவை எடுத்து வந்த இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அம்பத்தூர் பகுதியில் கட்டிட வேலை செய்து வரும் வடமாநில இளைஞர்களிடம் கஞ்சா வாங்கி விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்ப்பனை செய்த மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஜமிரூல் (33), தவுபிக் ஹல்ஹக் (28), ஆப்டர் (31) அப்துல் மோடின் (30) என்பதும், இவர்கள் கட்டிட வேலை செய்வது போல் நடித்து, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாவரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.  அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா, ரூ.7000 மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப் பட்டது. இதையடுத்து, அவர்களை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். அமைந்தகரை  சுப்புராய நகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  

அப்போது, ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 2 பேரை மடக்கி, பிடித்து  விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.   இதையடுத்து, ஆட்டோவை பரிசோதனை செய்தபோது, ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்  ஐயப்பன் (45), அமைந்தகரையை சேர்ந்த நந்தகுமார் (39) என்பதும், சென்ட்ரல் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து,  விற்று வந்ததும்  தெரியவந்தது. அவர்களை கைது செய்து கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Tags : North State , North State youths were arrested for selling ganja in the suburbs by pretending to be construction workers
× RELATED முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில்...