×

நெல்லையில் ஸ்டாலின் வரவேற்பில் அரசு திட்டங்களுடன் மேடை அமைப்பு: தேச தலைவர்கள் வேடமணிந்து குழந்தைகள் வரவேற்பு

நெல்லை: நெல்லையில் நடந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு தேச தலைவர்கள் வேடமணிந்த குழந்தைகள் பூக்களுடன் நின்று வரவேற்பு அளித்தனர். அரசு திட்டங்களை விளக்கும் வகையில் மேடை அமைக்கப்பட்டு விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நெல்லையில் இன்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.330 கோடியில் 30 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மூலம் முடிவடைந்த பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலினுக்கு நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து விழா நடைபெறும் அரசு மருத்துவ கல்லூரி மைதானம் வரை சுமார் 7 கி.மீ. வரை சாலையின் இருபுறங்களிலும்   தாரை, தப்பட்டை மற்றும் வாண வேடிக்கைகள் முழங்க பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள், தப்பாட்டம், செண்டை மேளம், பறைஇசை, டிரம்ஸ், கரகாட்டம், நாதஸ்வரம், தவில் இசைத்து வரவேற்றனர்.  நீதிமன்றம் அருகில் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டுநின்று வரவேற்றனர்.

இதுபோல் பள்ளி குழந்தைகள் கருணாநிதி, எம்ஜிஆர், ஒவையார், அன்னை தெரஸா, திருவள்ளுவர், விவேகானந்தர், வேலுநாச்சியார் உள்ளிட்ட தேச தலைவர்கள் வேடம் அணிந்து முதல்வரை வரவேற்றனர். இதுபோல் பள்ளி மழலையர் பள்ளி மாணவ, மாணவிகள் கையில் பூக்களுடன் நின்று முதல்வரை அன்புடன் வரவேற்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின், வாகனத்தில் இருந்து இறங்கி குழந்தைகளிடம் நலம் விசாரித்து அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

இதுபோல் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அறிவிக்கப்பட்ட அரசு நலத்திட்டங்களான இல்லம்தேடி கல்வி திட்டம், மக்களை தேடி மருத்துவ திட்டம், வேளாண்மை திட்டம், மாற்று திறனாளிகளுக்கான திட்டம், நான் முதல்வன் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்,  அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு  பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை  சிற்றுண்டி  வழங்கும் திட்டம் மற்றும் சென்னை யில் நடந்த 44வது சதுரங்க போட்டி ஆகியவற்றை விளக்கும் வகையில்  பாளை சட்டக்கல்லூரி அருகே ஆங்காங்கே சிறுசிறு மேடைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த மேடைகளில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையில் விவசாயிகள் ஏர் கலப்பையுடனும், மாற்று திறனாளிகள், சிறுவர்கள், மருத்துவர்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள் திரண்டு நின்று முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது பொதுமக்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. வரவேற்பின்போது முதல்வருக்கு கட்சியினர் மாலை மற்றும் சால்வை வழங்கி வரவேற்றனர். அவற்றை அவர் அன்புடன் ஏற்றுக்கொண்டார் அப்போது  பொதுமக்கள் அளித்த மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

Tags : Stalin ,Nellai , Stage set-up with government programs at Stalin's reception at Nellai: Children dressed up as national leaders and welcomed
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...