திண்டுக்கல்: திண்டுக்கல் மலைக்கோட்டையில் பசுமை மிக்கதாக மாற்ற கடந்த அதிமுக ஆட்சியில் நடப்பட்ட மரங்கள் மாயமாகி உள்ளது. திண்டுக்கல்லில் வரலாற்று சிறப்புமிக்க மிகப் பழமையான மலைக்கோட்டை உள்ளது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மலைக்கோட்டைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழக வனத்துறை அமைச்சராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின் பேரில் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் சுதந்திர போராட்டத்தில் தொடர்புடைய திண்டுக்கல் மலைக்கோட்டையை பசுமை மிக்கதாக மாற்ற அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. இதற்காக திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேலே உள்ள பாறைகளில் வளரக்கூடிய அத்தி, அரசு, ஆல், இச்சி, கல் இச்சி உள்ளிட்ட பல வகை மரங்களை நடவு செய்து, அதனை சொட்டு நீர் பாசனம் மூலம் வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கடந்த 2017-18ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானிய கோரிக்கையின் போது ஒரு மரம் வளர்க்க ஆயிரம் வீதம் 5000 மரங்களை நடவு செய்து மரங்களை வளர்க்க 50 லட்சம் செலவில் நடவு செய்யும் திட்டம் நடைபாண்டில் மேற்கொள்ளப்படும் என அப்போது அமைச்சராக இருந்த திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். அதன்படி திண்டுக்கல் மலைக்கோட்டையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அத்தி, அரசு, ஆல், இச்சி, கல்இச்சி போன்ற மரங்கள் பாறையில் இடுக்குகளில் முதல் கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கான விழாவில் அப்போதைய வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து துவக்கி வைத்தார். இதற்காக மலை பாறைகளில் இரும்பு பேரல்களில் மண்ணை நிரப்பி மரம் நடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு மலைக்கோட்டையில் இருக்கும் சிறு குட்டைகளில் தேங்கிய தண்ணீரைக் கொண்டு சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் விட ஏற்பாடு செய்யப்பட்டது. மலைக்கோட்டையில் மரக்கன்றுகள் நடப்பட்டு ஒரு சில வருடங்கள் மட்டுமே பராமரிப்பில் இருந்து வந்தது. அதன் பிறகு மரங்களின் நிலை என்ன ஆனது என்று யாரும் கவனிக்கவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மரக்கன்றுகள் நடப்பட்ட இடங்களில் வெறும் இரும்பு பேரல் குவியலாகவும் சொட்டுநீர் பாசனத்திற்காக பயன்படுத்தப்பட்ட குழாய்கள் அனைத்தும் துண்டு துண்டாக கிடைக்கிறது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் கூறுகையில், ‘‘ஐந்து ஆண்டுகள் முடிந்து மலைக்கோட்டையில் பார்க்கும் பொழுது அங்கு ஒரு மரம் கூட நிலையாக நிற்கவில்லை. ஐம்பது லட்சம் ரூபாய் பணத்தை வைத்து ஒரு மலைக்கோட்டையை பசுமை படுத்துகிற பணியை செய்கிறோம் என்று சொல்லி வனத்துறை மானிய கோரிக்கையில் வனத்துறை அமைச்சர் பெயரளவில் சில டிரம்முகளை வைத்து மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதில் முறைகேடு நடந்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
