வீட்டில் தனியாக இருந்த தலைமை ஆசிரியையை வெட்டி கொன்று நகை, பணம் கொள்ளை: திருப்புத்தூரில் பயங்கரம்

திருப்புத்தூர்: திருப்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த தலைமை ஆசிரியையை வெட்டிக்கொன்று நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் தென்மாப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரஞ்சிதம் (52). இவரது கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்டார். மகன் கோவை மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். மகள் திருமணமாகி பட்டுக்கோட்டையில் வங்கியில் பணிபுரிகிறார். திருப்புத்தூர் கான்பா நகரில் ரஞ்சிதம் மட்டும் தனியாக வசித்து வந்தார். இவர் நேற்று காலை பள்ளிக்கு வரவில்லை. எனவே ஆசிரியர்கள் போன் செய்து பார்த்தனர். நீண்டநேரமாகியும் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது ரஞ்சிதம் கை, கால்களில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்து திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

போலீசார் கூறுகையில், ‘‘ரஞ்சிதம் தனியாக இருப்பதை அறிந்த மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். பின்னர் அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக தெரிகிறது. குடும்பத்தினர் வந்தப்பிறகே கொள்ளை போன நகை, பணத்தின் மதிப்பு தெரியவரும். மேலும் வீட்டின் முன்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் வயர்களை துண்டித்துள்ளனர். கொலை செய்த பின்னர் வீட்டின் பின்புறம் வழியாக காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றிருக்கலாம். உண்மையிலேயே நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

Related Stories: