முதலில் பேசலாம் பிறகு பேசலாம்: எதிர்கட்சிகளுக்கு நிதிஷ் அழைப்பு

புதுடெல்லி: ‘தற்போது அமையப் போவது 3வது அணி அல்ல, இதுவே பாஜவுக்கு எதிரான முக்கிய கூட்டணி’ பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். பீகாரில் பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றியணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். கடந்த வாரம் பாட்னாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசிய நிதிஷ், பாஜவுடனான கூட்டணியை முறித்து கொண்ட பின் முதல் முறையாக, கடந்த 5ம் தேதி டெல்லிக்கு வந்தார்.

இங்கு, காங்கிரஸ் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து பேசினார். நேற்று அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர் நிதிஷ் குமார் அளித்த பேட்டியில், ‘‘எதிர்க்கட்சி சக்திகளை ஒன்றிணைக்க பவாரும் நானும் ஆர்வமாக உள்ளோம். கூட்டணியின் தலைவரை பின்னர் முடிவு செய்யலாம். முதலில் ஒன்று சேர்வது முக்கியம். தற்போது அமையப் போவது மூன்றாவது அணி அல்ல, இதுதான் பாஜ எதிர்த்து நிற்கப் போகும் முக்கிய கூட்டணி’’ என்றார்.

Related Stories: