×

சிவசேனா சின்னம் யாருக்கு? உச்ச நீதிமன்றத்தில் 27ம் தேதி விசாரணை

மும்பை: மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்ட பின்னர், தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று அறிவிப்பதோடு வில் அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியினர் தேர்தல் கமிஷனில் மனு செய்தனர். இதனை எதிர்த்து உத்தவ் தாக்கவே அணியினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, ‘5 நீதிபதிகளை கொண்ட அமர்வு விசாரணை நடத்தும்’ என்று உத்தரவிட்டார். இதற்கிடையே, அடுத்த மாதம் சில தேர்தல்கள் நடக்க இருப்பதால் சின்னம் வழங்குவதில் விரைவில் முடிவெடுக்கக் கோரி, ஏக்நாத் ஷிண்டே அணி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது.

பதிலுக்கு, ‘தேர்தல் கமிஷன் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரி உத்தவ் தாக்கரே அணியினர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நேற்று பரிசீலித்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, வரும் 27ம் தேதி விசாரணை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த மனு மட்டுமல்ல, கவர்னரின் அதிகாரம், சபாநாயகர், துணை சபாநாயகரின் அதிகாரம், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் பதவி பறிப்பு சம்பந்தப்பட்ட சட்டங்கள் தொடர்புடைய மேலும் 5 மனுக்களும் வரும் 27ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர்.

Tags : Shiv Sena ,Supreme Court , Shiv Sena symbol for whom? Hearing in Supreme Court on 27th
× RELATED நாகப்பட்டினம் சில்லடி தர்கா கடற்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை