×

தாளவாடி மலைப் பகுதியில் கனமழை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ் இறங்க முடியாமல் தவித்த பயணிகள்

சத்தியமங்கலம் : தாளவாடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்சிலிருந்து பயணிகள் இறங்க முடியாமல் தவித்தனர். வெள்ளம் வடிந்த பிறகு அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலமலை, தொட்டபுரம், முதியனூர், நெய்தாளபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், நெய்தாளபுரம் வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது, தாளவாடியில் இருந்து தலமலை வழியாக சத்தியமங்கலம் நோக்கி அரசு பஸ் சென்றது. பஸ்சில்  40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கனமழை காரணமாக, நெய்தாளபுரம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் சாலையில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி ஓடியது. இதைக் கண்ட பஸ் டிரைவர், வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலத்தை கடந்து செல்ல முயற்சித்து பஸ்சை இயக்கினார்.

பஸ் காட்டாற்று வெள்ளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக வெள்ளம் மளமளவென அதிகரித்தது. இதில், பஸ் சிக்கி நகர முடியாமல் இன்ஜின் ஆப் ஆகி காட்டாற்று வெள்ளத்தின் நடுவே நின்றது. இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் இறங்க முடியாமல் மரண பீதியடைந்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் 1 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு வெள்ளம் வடிந்தது.  இதையடுத்து, அருகில் இருந்த ஊர் பொதுமக்கள் உதவியுடன் பயணிகள் மீட்கப்பட்டனர். பிறகு பஸ் நகர்த்தப்பட்டு சாலை பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து துண்டிக்கப்பட்ட  போக்குவரத்து சீரானது.

Tags : Talavadi , Sathyamangalam: Passengers were unable to get down from the government bus caught in the forest flood near Thalawadi.
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்த புள்ளி மான்