×

காங்கயம் நாட்டு மாட்டு பால் விற்பனையை அதிகரிக்க கொள்முதல் நிலையம் அமையுமா?

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

காங்கயம் : பர்கூர் நாட்டு மாட்டின பால் சேகரிப்பு விற்பனை மையம் அமைத்தது போல, காங்கயம் இன நாட்டு மாட்டு பால் விற்பனையை அதிகரிக்கும் வகையில் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயம் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது காங்கயம் இன பசு மாடுகளும், காளைகளும்தான். திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் காங்கயம் இன மாடுகள் தற்போது அதிக அளவில் வளர்க்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், இப்பகுதியில் மானாவாரி நிலங்களில் வளரும், கொழுக்கட்டை புல் வகை. இவை கோடை காலத்தில் முழுவதும் காய்ந்து விடும், பின்னர், மழைக்காலத்தில் நன்கு வளரும். இந்த புற்களை உணவாக உட்கொள்வதால்தான் காங்கயம் மாடுகள், திடகார்த்திரமாக உள்ளது. புற்களில் கால்சியம், மக்னீசியம், உள்ளிட்ட பல நுண் சத்துக்கள் உள்ளன. இதனால் காங்கயம் இன பசுமாடுகளின் பாலிலும் சத்து கூடுகிறது.

மேலும் தாய்ப்பால் பற்றக்குறையாக இருக்கும் குழந்தைகளுக்கு, நாட்டு மாட்டு பால் மட்டுமே தரப்படுகிறது. இதற்காக காங்கயம் மாடுகள் அதிக செறிவுள்ள பகுதியாக விளங்கும், காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், சென்னிமலை, அரச்சலூர், சிவகிரி, தாராபுரம் பகுதிகளில் காங்கயம் நாட்டு மாட்டு இன பால் சேகரிப்பு மற்றும் விற்பனை மையத்தை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை நாளுக்குநாள் வலுத்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் பர்கூர் நாட்டு மாட்டின பால் சேகரிப்பு மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்பட்டு ஈரோடு, கோவை, மைசூர் போன்ற நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இது போல,  திருப்பூர் மாவட்ட, ஆவின் நிர்வாகத்தின் சார்பில் மேற்கண்ட ஏதேனும் ஒரிரு பகுதியில் காங்கயம் நாட்டு மாட்டு இன பால் சேகரிப்பு மற்றும் விற்பனை மையத்தை துவங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விவசாயிகள் இடையே இவ்வின மாடுகளை அதிக அளவில் வளர்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் விற்பனை மையத்தை அமைத்து கண்ணாடி குடுவைகளில் அடைத்து திருப்பூர் போன்ற நகரங்களுக்கு பாலை விற்பனைக்கு அனுப்பினால் நல்ல விலை கிடைக்கும். இதற்கு, திருப்பூர் ஆவின் நிர்வாகம் இதற்கான முழு முயற்சி எடுக்க வேண்டும் என காங்கயம் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் வறட்சியான பகுதியில் மட்டுமே வளர்க்கப்பட்டு வரும் காங்கயம் இன பசுமாடுகள் மற்றும் காளைகள் அப்பகுதியில் கிடைக்கும் தீவனங்களை உண்டு வளரும் இயல்பு கொண்டது. அப்பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப காங்கயம் கால்நடைகள் தமது உடலை தகவமைத்து கொள்ளும். காங்கயம் நாட்டுமாட்டு பால் எந்த காலநிலையிலும் எந்த வயதினரும் அருந்தும் வகையில் உள்ளது. இதன் தேவையை கருதி கால்நடைத்துறையும் முன் முயற்சி எடுத்து பால் கொள்முதல் நிலையத்தை காங்கயம் சுற்றுவட்டார பகுதியில் அமைக்க முன்வர வேண்டும் என பாப்பினி பகுதி காங்கயம் நாட்டு மாடு வளர்க்கும் விவசாயி வேலுச்சாமி கோரியுள்ளார்.

கொங்கு மண்டலத்தின் தாய் வீட்டு சீதனம்

கரிய நிறம், கூரான கொம்புகள், கம்பீரமான உடலமைப்பு,  மலை போன்ற திமில்களுடன் காட்சியளிக்கும் காங்கயம் இன காளைகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டிகளில் பிடிபடாத வீரத்திற்கு பெயர் பெற்றவை. எருதுகள் சுமார் 4 டன் எடை கொண்ட பாரத்தையும் சாதாரணமாக இழுக்கும் ஆற்றல் உடையவை. அதேபோல குறைவான தீவனத்தை உண்டு சத்தான பாலை தரும் காங்கயம் இன பசுக்களை கொங்கு மண்டல பகுதிகளில் திருமணம் முடித்து செல்லும் பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக தருவது மரபாக உள்ளது.

உடலுக்கு கேடு விளைவிக்காத ஏ2 பால் ரகம்

காங்கயம் இன மாட்டு பால் உடலுக்கு கேடு விளைவிக்காத ஏ2 ரகத்தை சேர்ந்தது. இதனால் இந்த பாலுக்கு தனி கிராக்கி உண்டு. 1 லிட்டர் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஐரோப்பா, அமெரிக்கா உள்பட மேலை நாடுகளில் சாதரண பாலுக்கும், ஏ2 ரக பாலுக்கும் அதிக விலை வித்தியாசம் உள்ளது. அங்குள்ள பல்பொருள் அங்காடிகளில் ஏ2 ரக பாலுக்கு எப்போதும் கிராக்கி உள்ளது. இதன் காரணமாக அந்நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மெக்கிகோ, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏ2 ரக பாலை அதிகம் இறக்குமதி செய்கின்றன.

Tags : Kangyam , Chinna Salem: Students welfare at Pakambadi Government High School near Chinnasalem
× RELATED காங்கயம் பகுதியில் வெள்ள வேலமர பட்டை மரங்கள் மடியும் அபாயம்