×

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபயணம் ராகுல் காந்தி சென்னை வந்தார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை வழங்கி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்கள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக நேற்று இரவு அவர் சென்னை வந்தார். கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை வழங்கி அவரது நடைபயணத்தை இன்று தொடங்கி வைக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கும், ராகுல் காந்தி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

கன்னியாகுமரியில் இன்று தொடங்க இருக்கும் பாத யாத்திரையில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து நேற்றிரவு விமானம் மூலம் சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் நேற்று இரவு ஓட்டலில் தங்கினார். அங்கு அவர் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ராகுல் காந்தி இன்று காலை 6 மணியளவில் சென்னையில் இருந்து சாலை வழியாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி நினைவிடத்திற்கு செல்கிறார். அங்கு அவர் மலர் அஞ்சலி செலுத்துகிறார். காலை 6.50 மணியளவில் நினைவிடத்தில் உள்ள பாதுகாப்பு அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட ராஜிவ்காந்தியின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

காலை 6.55 மணியளவில் நினைவிடத்தை ராகுல்காந்தி சுற்றி பார்க்கிறார். காலை 7.05 மணியளவில் வீணை காயத்ரியின் இசையஞ்சலியில் பொதுமக்களுடன் ராகுல்காந்தி பங்கேற்கிறார். காலை 8 மணியளவில் நினைவிடத்தில் அரச மரக்கன்றை ராகுல் நடுகிறார். தொடர்ந்து ராஜிவ்காந்தி நினைவிட ஊழியர்கள் மற்றும் அவருடன் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8.10 மணியளவில் நினைவிட நுழைவாயிலில் காங்கிரஸ் கொடியை ராகுல்காந்தி ஏற்றுகிறார். காலை 8.15 மணியளவில் காரில் அவர் மீண்டும் சென்னை திரும்புகிறார். பகல் 11.40 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரிக்கு செல்கிறார்.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான படகில் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிடுகிறார். பின்னர் காமராஜர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தும் ராகுல்காந்தி, அதன் பின்னர் காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து அங்கிருந்து ராகுல் காந்தி நடைபயணத்தை தொடங்க உள்ளார்.இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தேசியக்கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கி நடைபயணத்தை தொடக்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து அங்கிருந்து 600 மீட்டர் நடைபயணத்தை ராகுல் மேற்கொள்கிறார். ராகுல்காந்தியுடன் 300 பேர் நடைபயணத்தில் பங்கேற்கின்றனர். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 118 பேர் அவருடன் டெல்லி வரை பயணிக்கின்றனர். 100 பேர் தமிழ்நாட்டில் இருந்து நடைபயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பின்னர் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடைபெறுகின்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேசுகிறார். இரவு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் ராகுல்காந்தி ஓய்வு எடுக்கிறார்.

நாளை காலை 6 மணிக்கு நடைபயணம் தொடங்கும் ராகுல்காந்தி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து புறப்படுகிறார். கல்லூரி முதல் கொட்டாரம் காமராஜர் சிலை வரை நடைபயணம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு கொட்டாரம் காமராஜர் சிலை தொடங்கி பொத்தையடி ஜங்ஷன் வரை நடக்கிறது. 10ம் தேதி வரை குமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுல் 11ம் தேதி பாறசாலை வழியாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார். ராகுல்காந்தி மற்றும் அவருடன் பாத யாத்திரை செல்லும் காங்கிரஸ் அகில இந்திய தலைவர்கள் தங்க, ஓய்வெடுக்க வசதியாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 60 கேரவன்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கேரவான்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கேரவனை ராகுல்காந்தி மற்றும் அவருடன் வருகின்ற தலைவர்கள் பயன்படுத்துவதற்காக தேவையான வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது கேரவனில் படுக்கை வசதி, சமையல் அறை, கழிவறை, குளியல் அறை போன்றவை உட்பட நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன. ராகுல்காந்தி வருகையையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கன்னியாகுமரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். ராகுல்காந்தி ஒற்றுமை பயணம் செல்லும் இடங்களில் முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கன்னியாகுமரிக்கு வந்தவண்ணம் உள்ளனர். இதனால், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களால் களைகட்ட தொடங்கியுள்ளது. ராகுல் காந்தி தமிழகம் வருகை, காங்கிரஸ் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

*ராகுல்காந்தியுடன் செல்லும் 118 பேர்
ராகுல்காந்தியுடன் பாத யாத்திரையில் பங்கேற்க விரும்புகின்றவர்கள் பதிவு செய்ய காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி 27 வயதினர் முதல் 58 வயதுள்ள 118 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து காயத்ரிராஜ் முரளி, முகம்மது ஆரிப், வக்கீல் சுதா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். பயணம் செல்லும் பாதை கன்னியாகுமரியில் தொடங்கும் பயணம் திருவனந்தபுரம், கொச்சி, நிலம்பூர், மைசூர், பெல்லாரி, ரெய்ச்சூர், விகாராபாத், நான்டேட், ஜல்கான் ஜமோத், இந்தூர், கோட்டா, தவுசா, அல்வார், புலந்தசாஹர், டெல்லி, அம்பாலா, பதன்கோட், ஜம்மு, ஸ்ரீநகர் செல்கிறது.

Tags : Kanyakumari ,Kashmir ,Rahul Gandhi ,Chennai ,Chief Minister ,M.K.Stalin , 150 days trek from Kanyakumari to Kashmir Rahul Gandhi arrives in Chennai: Chief Minister M.K.Stalin launches national flag today
× RELATED நாகர்கோவில் – கன்னியாகுமரிக்கு இரவு நேர பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுமா?