×

ஜார்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு ஹேமந்த் சோரன் அரசு வெற்றி: 48 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர்

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சிகளின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு முதல்வர் ஹேமந்த் சோரன் பதவியை தவறாக பயன்படுத்தி சுரங்க குத்தகை ஒப்பந்தம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து அவரது எம்.எல்.ஏ. பதவியை தகுதிநீக்கம் செய்ய ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. இந்நிலையில், ஆளுங்கட்சி எம்எல்ஏ.க்களை பாஜ. வளைக்காமல் இருக்க அவர்கள் சட்டீஸ்கரில் உள்ள ராய்ப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

 இதனிடையே, இந்தஅரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர ஹேமந்த் சோரன் முடிவு செய்தார். ஜார்கண்ட் சட்டப்பேரவையில் ஐமு கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 30, காங்கிரசுக்கு 18, ஆர்ஜேடிக்கு ஒரு எம்எல்ஏ உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜ.வுக்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில், ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று நடந்தது. இதில், மொத்தம் உள்ள 81 எம்எல்ஏ.க்களில் 48 பேர் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். இதனால், அவர் தலைமையிலான கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாஜ நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தது.

*ஆட்சி கலைப்பு முயற்சி
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்ட போது, கூச்சல்களுக்கு இடையே பேசிய முதல்வர் சோரன், ‘’பாஜ ஆட்சி அல்லாத மாநிலங்களில் ஆட்சியை கலைக்க பாஜ முயன்று வருகிறது. அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மாவும் கூட ஜேஎம்எம் எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சித்தார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாட்டில் வன்முறையை தூண்டி விடவும் பாஜ தயங்காது,’’ என்று குற்றம் சாட்டினார்.



Tags : Hemant Soren ,Govt ,Jharkhand , Hemant Soren govt wins trust vote in Jharkhand, 48 MLAs vote in favor
× RELATED ஜார்க்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா போட்டி