×

20,000 வாக்கு வித்தியாசத்தில் சுனக் தோல்வி இங்கிலாந்து புதிய பிரதமர் லிஸ் டிரஸ்

லண்டன்:இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தனது பிரதமர் பதவி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவி  என் இரண்டையும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் நடக்கிறது. இதில் வெற்றி பெறுபவரே புதிய பிரதமராக பதவியேற்பார். இப்பதவிக்கு 8 பேர் போட்டியிட்டனர். இதில், இந்திய வம்சாவளியும், முன்னாள் நிதி அமைச்சருமான ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகியோர் இறுதிக்கட்ட போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் தபால் மூலமாகவும், ஆன்லைனிலும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிந்தது.

இந்த வாக்குகள் எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. இதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், ரிஷி சுனக் 60,399 வாக்குகளும், டிரஸ் 81,326 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராகவும், நாட்டின் புதிய பிரதமராகவும் லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து பிரதமராகும் நான்காவது தலைவர் லிஸ் டிரஸ் ஆவர். இங்கிலாந்து வரலாற்றில் 3வது பெண் பிரதமர் என்ற பெருமையையும் டிரஸ் பெற்றார். இதற்கு முன் மார்கரெட் தாட்சர், தெரசா மே ஆகிய 2 பெண் பிரதமர்கள் அதிகாரத்தில் இருந்துள்ளனர். புதிய பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் டிரஸுக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

*மோடி வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரசுக்கு வாழ்த்துகள். உங்கள் தலைமையின் கீழ், இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மை மேலும் பலப்படும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். உங்கள் புதிய பொறுப்புகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்’ என்று கூறி உள்ளார்.



Tags : UK ,Liz Truss , New UK Prime Minister Liz Truss lost by a margin of 20,000 votes
× RELATED பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்