×

10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல்நீர் உட்புகும் அபாயம் வேம்பாரில் கூடுதல் தூண்டில் வளைவு அமைக்கப்படுமா?

அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய மீனவர்கள் கோரிக்கை

குளத்தூர் : 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில், வேம்பாரில் கூடுதல் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது தொடர்பாக நீர்வளத்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டுமென்று மீனவர்கள் தெரிவித்தனர்.
 வேம்பார் மற்றும் கடற்கரை பகுதியையொட்டி பெரியசாமிபுரம், பச்சையாபுரம், குஞ்சையாபுரம் என 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.

இப்பகுதியில் உள்ள 3,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீன்பிடி தொழிலை பிரதானமாக மேற்கொண்டு வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் 60க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலமாக மீன்பிடித்தொழிலை செய்து வருகின்றனர். வேம்பார் கடற்கரை பகுதியில் ஆக்ரோஷமான அலைகளால் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்பட்டு கிராமத்துக்குள் தண்ணீர் புகுவதும், கரையில் நிறுத்தி வைக்கும் படகுகள் சேதமடைவதுமாக இருந்தது. இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் கடல் அரிப்பால் கடற்கரை பகுதி கிராம மக்களை காப்பாற்றவும், படகுகளை சேதமின்றி பாதுகாக்கவும் நீண்டகாலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையேற்று வேம்பாரில் ரூ.14.20 கோடி மதிப்பிலும், கீழவைப்பாரில் ரூ.11.25 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்க அப்போதைய அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொண்டது. வேம்பார் கடற்கரையிலிருந்து கடலுக்குள் மொத்தமாக 870 மீட்டர் வரையிலும், கீழவைப்பாரில் 750 மீட்டர் தொலைவிற்கும் கருங்கற்களை கொண்டு தூண்டில் வளைவு அமைக்கும் பணி கடந்த 2017ம் ஆண்டில் நிறைவடைந்தது.

இதில் வேம்பாரில் தூண்டில் வளைவு 3 பிரிவுகளாக அமைக்கப்பட்டது. இதில் 1 வது வளைவு கடலுக்குள் 170 மீட்டர் வரையிலும், 2வது 200மீட்டர் வரையிலும், 3வது 500மீட்டர் வரையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3வது வளைவில் கடற்கரை மாதா கோயிலுக்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் அருகில் டி வடிவிலான தூண்டில் வளைவு, மீன்பிடி இறங்கு தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த டி வடிவ தூண்டில் வளைவு அமைக்கும் போது அப்பகுதி மீனவர்களின் கருத்து கேட்கப்படவில்லை. அதே போன்ற கடல் அலைகளின் சீற்றம் குறித்தும் ்அப்பகுதியில் மீன்வளத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கீடவில்லை. மாறாக, அதிகாரிகள் தாங்கள் இஷ்டம் போல தூண்டில் வளைவு அமைத்தனர்.  இந்த தூண்டில் வளைவால் வேம்பார் கிழக்கு பகுதியில் கடல் அரிப்பு குறைந்திருந்தாலும், மேற்கு பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக கடந்த காலங்களில் சுமார் 200 மீட்டர் வரையில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையோரம் இருந்த 10க்கும் மேற்பட்ட மீன்கம்பெனிகள் சேதமடைந்துள்ளது. இந்த சூழலில் கடல் பகுதியிலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள அரசு டீசல் பங்க், கடல் காவல்நிலையம் மற்றும் வயர்லெஸ் டவர் ஆகியவை கடல் அரிப்பின் காரணமாக கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிராமத்திற்குள் கடல் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் வேம்பார் மேற்கு பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ‘இப்பகுதி கிராமத்தை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். வேம்பார் கடல் பகுதி பல நாட்கள் ஆக்ரோஷமாகவே காணப்படும். இதனால் வேம்பார் கடற்கரை பகுதி மணல் அரிப்பு ஏற்பட்டு அடிக்கடி கரையோர குடியிருப்புகளை பாதித்து வந்தது மட்டுமில்லமால் கரைகளில் படகுகளை அலையில் அடித்து சென்று சேதமடைந்து வந்தது.

இதையடுத்து இக்கிராம மீனவர்கள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தூண்டில் வளைவு பாலங்களை அமைக்க ஆய்வு மேய்கொண்டு பாலங்களை அமைத்த போதிலும் கிழக்கு பகுதியை தவிர மேற்குபகுதி முழுவதும் இன்றும் கடல் அரிப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

எனவே மேற்கு பகுதியில் கூடுதாக ஒரு தூண்டில் வளைவு பாலம் அமைத்தால் கடல் அரிப்பு பிரச்னையில் இருந்து வேம்பார் கடற்கரை பகுதி மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். மேலும் கடற் கரையை யொட்டி உள்ள அரசு டீசல் பல்க் எதிரே சுமார் ரூ.12 லட்சம் மதிப்பில் கற்கள் கொண்டு வரப்பட்டு பணி துவக்கப்பட்டது. ஆனால் இப்பணிகள் திடீரென கிடப்பில் போடப்பட்டது. இப்பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Vembar , Kulathur : In order to prevent intrusion of sea water in more than 10 fishing villages, steps have been taken to construct additional bait bar at Vembar.
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்