×

பூந்தமல்லி புறவழிச் சாலையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம், மேலும் 6 மாதம் நீட்டிப்பு; காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை பூந்தமல்லி டிரங்க் சாலையில் பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரை நடைபெறும் மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக (கட்டம்-2) (4வது வழித்தடம்)  தற்போதுள்ள போக்குவரத்து முறையில் பின்வரும் தற்காலிக போக்குவரத்து மாற்றம் 4-5-2022 முதல் 3-9-2022 வரையில் பகல் மற்றும் இரவு முழுவதும் நடைமுறையில் இருந்தது. மேற்படி போக்குவரத்து மாற்றமானது நேற்று (4ம் தேதி) முதல் 6 மாதங்களுக்கு நீடிப்புசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: கரையான்சாவடியில் இருந்து பூந்தமல்லி டிரங்க் சாலையில் பூந்தமல்லி பேருந்து முனையம் செல்ல கனரக வாகனங்களுக்கு (லாரி, டிரக், பேருந்து) அனுமதி இல்லை. ஆம்புலன்ஸ், இலகு ரக மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு அனுமதிக்கப்படும். போருரிலிருந்து பூந்தமல்லி செல்லும் வாகனங்கள்:

அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் கரையான்சாவடி சந்திப்பில் வலது புறம் திரும்பி, ஆவடி சாலை வழியாக சென்னீர்குப்பம் சென்று பூந்தமல்லி புறவழிச்சாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகே அம்பேத்கர் சிலைக்கு இடது புறமாக சென்று பூந்தமல்லி பேருந்து முனையத்தை அடைய வேண்டும். பேருந்து அல்லாத இதர வணிகம் மற்றும் கனரக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் இருந்து வலது புறம் சென்று, சவீதா பல் மருத்துவமனை சந்திப்பு வழியாக தங்கள் இலக்கையடைய, பூந்தமல்லி புறவழிச்சாலையில் இடதுபுறம் திரும்பி சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். கோயம்பேடு, மதுரவாயல் பக்கமிருந்து பூந்தமல்லிக்கு செல்லும் வாகனங்கள்: மாநகர பேருந்துகள் குமணன்சாவடி வழியாக சென்று கரையான்சாவடி சந்திப்பில் வலது புறம் திரும்பி, ஆவடி சாலை வழியாக சென்னீர்குப்பம் சென்று, சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி புறவழிச் சாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகில் அம்பேத்கர் சிலைக்கு இடது புறம் சென்று பூந்தமல்லி பேருந்து முனையத்தை அடைய வேண்டும். இதர அரசு போக்குவரத்துக்கழக பேருந்து வணிகம் மற்றும் கனரக வாகனங்கள் சவீதா பல் மருத்துவமனையில் இருந்து நேராக புறவழிச்சாலை வழியாக, பூந்தமல்லி பாலத்தை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.  

மாங்காட்டில் இருந்து பூந்தமல்லி செல்லும் வாகனங்கள்: அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் கரையான் சாவடி சந்திப்பில் வலது புறம் திரும்பி, ஆவடி சாலை வழியாக சென்னீர்குப்பம் சென்று, பூந்தமல்லி புறவழிச்சாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகில் அம்பேத்கர் சிலைக்கு இடது புறமாக சென்று பூந்தமல்லி பேருந்து முனையத்தை அடைய வேண்டும்.  பேருந்து அல்லாத இதர வணிகம் மற்றும் கனரக வாகனங்கள் மாங்காடு சந்திப்பில் இருந்து வலதுபுறம் சென்று சவீதா பல் மருத்துவமனை சந்திப்பு வழியாக தங்கள் இலக்கை அடைய பூந்தமல்லி புறவழிச்சாலையில் இடதுபுறம் திரும்பி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை அடையலாம். பருத்திப்பட்டில் இருந்து ஆவடி சாலையில் பூந்தமல்லி நோக்கி வரும் அனைத்து வணிக வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்னை - பெங்களூரு பூந்தமல்லி புறவழிச்சாலையில் வலது அல்லது இடதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும். நேராக கரையான் சாவடி நோக்கி செல்லக் கூடாது. சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் நசரத்பேட்டையில் இருந்தும், ஓ.ஆர்.ஆர் வெளிவட்டச் சாலையில் இருந்தும், பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு செல்லும் அனைத்து மாநகர பேருந்துகளும் வழக்கம்போல் பூந்தமல்லி பேருந்து நிலையம் செல்லலாம். வணிகம் மற்றும் கனரக வாகனங்கள் பூந்தமல்லி பேருந்து நிலைய நோக்கி செல்ல அனுமதி இல்லை. அந்த வாகனங்கள் சென்னை -பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்து பிஎஸ்என்எல் அருகில் இடதுபுறம் திரும்பி பூந்தமல்லி புறவழிச்சாலை வழியாக தங்கள் இலக்கை அடையலாம்.

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து பேருந்துகளும் பாரிவாக்கம் சாலை வழியாக பூந்தமல்லி புறவழிச்சாலைக்கு சென்றடைய வேண்டும். நசரத்பேட்டை திருவள்ளூர் மார்க்கமாக அல்லது ஓ.ஆர்.ஆர் வெளிவட்டச் சாலை வழியாக செல்ல வேண்டிய பேருந்துகள் பாரிவாக்கம் சாலை, பூந்தமல்லி புறவழிச்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சென்று தங்கள் இடத்தில் இலக்கை அடையலாம். போரூர், மாங்காடு மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் பூந்தமல்லி புறவழிச்சாலையில் வலது புறம் திரும்பி சவீதா பல் மருத்துவமனை சென்று, மீண்டும் வலது புறம் திரும்பி குமணன்சாவடி சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஆவடி மார்க்கமாக செல்லும் பேருந்துகளும் பூந்தமல்லி புறவழிச்சாலையில் சென்னீர்குப்பம் சென்று இடது புறம் திரும்பி தங்களது இலக்கை அடையலாம். எனவே, பொதுமக்கள் மேற்படி பணியினை விரைவில் முடிக்க இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

Tags : Poondamalli , Temporary traffic diversion on Poontamalli Bypass, extension for another 6 months; Police notification
× RELATED மதுரவாயலில் பரபரப்பு வங்கி மேலாளர் தற்கொலை: போலீசார் விசாரணை