×

கவரப்பேட்டை டாஸ்மாக் கடையில் காலையில் ஓட்டை போட்டு கொள்ளை; இரவில் துப்பாக்கி காட்டி கொள்ளை: ஒரே நாளில் ஒரே கடையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையில் அதிகாலை துளையிட்டு  கொள்ளையடித்த திருடர்கள் 2 பேரை அந்த துளை வழியாகவே வரவழைத்து போலீசார்  கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்த அதே டாஸ்டாக் கடையில் நேற்று இரவு துப்பாக்கி காட்டி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கும்மிடிப்பூண்டி  அடுத்த கவரப்பேட்டை எஸ்ஐ ரவி, ஊர்க்காவல்படை வீரர் ஜோதி ஆகியோர் நேற்று அதிகாலை  சுமார் 1 மணி அளவில் பைக்கில் ரோந்து வந்தனர். புதுகும்மிடிப்பூண்டி செல்லும் சாலையில் உள்ள  டாஸ்மாக் கடையில் வருகை பதிவேடு அட்டையில் எஸ்ஐ ரவி கையெழுத்து  போட்டுக்கொண்டிருந்தபோது ஊர்க்காவல் படை வீரர் ஜோதி, டாஸ்மாக்  கடையின் பின்புறமாக சென்று டார்ச் லைட் அடித்து பார்த்துள்ளார். அப்போது  டாஸ்மாக் கடை சுவரில் 1 அடி அகலம், நீளத்துக்கு ஒரு ஆள் செல்லும் அளவுக்கு  துளையிடப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் உஷாரான போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துவிட்டு, சுவற்றின் அருகே பாதுகாப்புக்காக நின்றனர். இதன் பின்னர்  உயரதிகாரிகள் உத்தரவுபடி, போலீசார் சுவரில் உள்ள துளை வழியாக கடையின் உள்ளே எட்டிப்பார்த்தபோது  உள்ளே 2 பேர் அமர்ந்து ஜாலியாக மது அருந்திக்கொண்டிருந்தனர்.

அவர்களை  வெளியே வரும்படி போலீசார் எச்சரித்தனர். அதன் பிறகு அவர்கள் ஓட்டை போட்ட துளை வழியாகவே அவர்களை வெளியே வரவழைத்து, விசாரித்தனர். பின்னர்  இருவரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தியதில், சென்னை  பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த சதீஷ்(32), விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த  முனியன் (30) என்பது தெரியவந்தது. கைதானவர்கள் தங்களுக்கு பிடித்த 1848  ரக பிராந்தியை குடித்துள்ளனர். பின்னர் கல்லாவில் இருந்த ரூ.14 ஆயிரத்தை  எடுத்துக்கொண்டு மெயின் லாக்கரை உடைக்க முயன்றபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர். இதனால் லாக்கரில் இருந்த ரூ.2 லட்சத்து 40 ஆயிரம்  தப்பியதும் தெரியவந்தது. இதுசம்பந்தமாக கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வந்த நிலையில், அதே கடையில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை அப்பகுதி மக்களை மட்டுமில்லாமல் போலீசாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. திருடர்கள் பிடிப்பட்ட சந்தோஷத்தில் ஓட்டையை அடைத்துவிட்டு, வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் வழுதலம்பேடு பகுதியை ேசர்ந்த பஞ்சாரம் மற்றும் ராகம்பாளையம் பகுதியை ேசர்ந்த மகாதேவன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு 8.45 மணியளவில் 2 மர்ம நபர்கள் கத்தியை காட்டி விற்பனையாளர்களை மிரட்டி மதுபாட்டில்கள் கேட்டுள்ளனர். அதை கொடுத்த பின்பு கல்லாவில் இருந்த பணத்தை கேட்டும் மிரட்டினர். அப்போது மகாதேவன் திருடன் என்று சத்தம் போட்டார். இதனை கேட்டு வௌியே இருந்த மற்றொரு மர்ம நபர் வேகமாக வந்து `துப்பாக்கியை எடு ‘ என்று கூறினார். இதனால், ஏற்கனவே பணம், மது பாட்டில்களை வாங்கிய கொள்ளையன் தான் தயாராக  வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், பயந்துபோன டாஸ்மாக் ஊழியர்கள் கடை கல்லாவில் இருந்த ரூ.30 ஆயிரத்தை எடுத்து கொடுத்தனர். அதை மர்ம நபர்கள் எடுத்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மகாதேவன் அவர்களை பிடிக்க ஓடினார். அப்போது, அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில் சினிமாவில் வருவதைபோல தன்னை துரத்தி வருபவர்களை மிரட்டும் வகையில், தான் பதுக்கி வைத்திருந்த பீர் பாட்டில்களை கடை ஊழியர்கள் மீது வீசினார். அவர்கள் ஒதுங்கியதால் அது சாலையில் பட்டு உடைந்து, அந்த பகுதி முழுவதும் பாட்டில் சில்லுகளாக காணப்பட்டது. இதில் அங்கிருந்த வடமாநில வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்குள் கொள்ளையர்கள் பணம், மது பாட்டில்களுடன் மாயமாகிவிட்டனர்.
 இதுகுறித்து புகாரின்பேரில் கவரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags : Kavarappettai Tasmac , Kavarappettai Tasmac shop looted in the morning; Robbery at gunpoint at night: A shocking incident at the same shop on the same day
× RELATED கவரப்பேட்டை டாஸ்மாக் கடையில்...