×

தமிழருக்கு வாய்ப்பளிக்காத என்எல்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை: ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி பேச்சு

நெய்வேலி:  நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தை கண்டித்து பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாமக தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். இதில் அன்புமணி பேசியதாவது: கடந்த 66 ஆண்டுகளில் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பும், உரிய இழப்பீட்டுத் தொகையோ வழங்காமல் இன்று வரை மக்களை அகதிகளாக வைத்துள்ளது. மேலும் கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக மாற்றி வருகிறது.

என்எல்சி நிர்வாகம் நிலக்கரி எடுப்பதன் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பிச்சை எடுக்கிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற என்எல்சி பொறியாளர்கள் தேர்வில் 299 பேர் தேர்வு செய்யப்பட்டதில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை. எனவே தமிழருக்கு வாய்ப்பளிக்காத என்எல்சி நிர்வாகம் தமிழ் நாட்டிற்கு தேவையில்லை. என்எல்சி நிர்வாகத்திற்கு பூட்டு போடும் போராட்டம் விரைவில் நடத்துவோம்.  உங்களை மீறி ஒரு பிடி மண்ணைக் கூட என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்த முடியாது. இந்த ஆர்ப்பாட்டம் என்எல்சி நிர்வாகத்திற்கு கடைசி எச்சரிக்கையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Tamil Nadu ,NLC ,Tamils ,Anbumani , Tamil Nadu does not need NLC that does not give opportunity to Tamils: Anbumani speech at protest
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...