×

எச்ஐவி பாதித்த மாணவிக்கு மேல் சிகிச்சை: மதுரை டீனுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  எச்ஐவி பாதித்த மாணவிக்கு உரிய மேல்சிகிச்சை வழங்க மதுரை டீனுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பள்ளியில் படித்தபோது என் மகளின் மூக்கில் ரத்தம் வடிந்ததால், மானாமதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். சரியாகாததால் மதுரை புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தோம். ஹீமோகுளோபின் மற்றும் ரத்த பிளேட்லெட்டுகள் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். கடந்த 24.9.2009ல் சிகிச்சைக்கு சேர்த்தோம். என் மகளுக்கு 2 முறை ரத்தம் செலுத்தினர். 30.9.2009ல் சிகிச்சை முடித்து வீடு திரும்பினோம். ஆனாலும் ரத்தம் வடிதல் நிற்கவில்லை. இதனால் மருத்துவமனையை மீண்டும் அணுகினோம்.

அவர்களது அறிவுறுத்தல்படி மேல்சிகிச்சைக்காக மதுரையிலுள்ள வேறு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் என் மகளுக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளதாக ெதரிவித்தனர். புதூர் மருத்துவமனையில் செலுத்தப்பட்ட ரத்தம் மூலம் எச்ஐவி பரவியது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கலெக்டர், மதுரை டீனை விசாரணை அதிகாரியாக நியமித்தார். இவர், கடந்த 2011ல் முறையாக விசாரிக்காமல் ஓர் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையை ரத்து செய்து கூடுதல் இழப்பீடு வழங்கவும், முறையான தொடர் சிகிச்சையளிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார். அரசு கூடுதல் பிளீடர் சசிக்குமார் ஆஜராகி, ‘‘அதிகாரிகள் மூலம் பரிசோதிக்கப்பட்ட பிறகே ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. ரத்த கொடையாளரிடம் நடத்திய பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. ரத்த வங்கியில் இருந்து முறையாக பரிசோதிக்கப்பட்ட ரத்தமே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தான் டீன் அறிக்கையளித்துள்ளார்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் மகளுக்கு எச்ஐவி தொற்றுள்ளவரின் ரத்தம் ஏற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது. இதில், மருத்துவமனை மீது குற்றம் சுமத்த முடியாது. டீனின் அறிக்கையிலும், மருத்துவமனை மற்றும் ரத்த வங்கி மீதும் எந்த தவறும் இல்லாததால் இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கேள்வி எழவில்லை. சிறுமிக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது. எனவே, அந்த சிறுமிக்கு தேவையான முறையான மேல்சிகிச்சையை வழங்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் நடவடிக்ைக எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Tags : ICourt ,Madurai , Over treatment of HIV infected student: ICourt branch order to Madurai dean
× RELATED பட்டதாரி ஆசிரியர் இறுதி பணிநியமன...