எதிர்ப்பு காட்டியதால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பலாத்கார முயற்சி பெண்ணை தூக்கி வீசி கொலை; அரியானாவில் காமுகன் பயங்கரம்

பதேப்பூர்: பலாத்காரம் செய்ய முயன்ற போது எதிர்ப்பு காட்டியதால், இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து வெளியே தள்ளி கொல்லப்பட்ட பயங்கர சம்பவம் அரியானாவில் நடந்துள்ளது. அரியானா மாநிலம் பதேப்பூரில் உள்ள தொகனா பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது பெண். இவர் தனது 9 வயது மகனுடன் நேற்று முன்தினம் இரவு ரயிலில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அவர் பயணித்த பெட்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் அங்கிருந்த சந்தீப் என்ற காமுகன், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அந்தப் பெண் எவ்வளோ கெஞ்சியும் விடவில்லை. அவரது 9 வயது மகன் கண் எதிரே பெண்ணை விரட்டி உள்ளார். அந்த பெண்ணும் கடுமையாக போராடி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சந்தீப், சிறிது நேரத்தில் ஸ்டேஷன் வந்தால் தான் மாட்டிக் கொள்வோம் என்பதால், ஓடும் ரயில் இருந்து அந்த பெண்ணை தூக்கி வெளியே வீசியுள்ளான். பின்னர் ரயிலில் இருந்து அவனும் குதித்துள்ளான். இதையெல்லாம் பார்த்த 9 வயது சிறுவன் அழுதபடி இருந்துள்ளார். தொகனா ரயில் நிலையில், மனைவியையும், குழந்தையும் அழைத்துச் செல்ல அவரது கணவர் வந்திருந்தார். அவர் தனது மகன் தனியாக அழுவதை பார்த்து பதறிப் போய் விசாரித்த போது, பயங்கர சம்பவம் தெரியவந்துள்ளது. போலீசார் உதவியுடன் ரயில் வந்த பாதையில் இரவு முழுவதும் தேடியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை தண்டவாளம் அருகே  சடலமாக கிடந்த அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. காயத்துடன் கிடந்த சந்தீப்பையும் போலீசார் பிடித்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அரியானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டுமென பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

* 20 கிமீ முன்பாக நடந்த கொடூரம்

கொலையான பெண்ணின் கணவர் கூறுகையில், ‘என் மனைவி செல்போனில் என்னை தொடர்பு கொண்டு, தொகனா வர இன்னும் 20 கிமீ மட்டுமே இருப்பதாகவும், ரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துச் செல்லும்படியும் கூறினார். அதன்பிறகு தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது,’ என கூறி உள்ளார்.

Related Stories: