×

ஜோ கார்ட்டர் 197 ரன் விளாசல் நியூசிலாந்து-ஏ 400 ரன் குவிப்பு

பெங்களூரு: இந்தியா-ஏ அணியுடனான முதல் டெஸ்டில் (4 நாள் ஆட்டம்), நியூசிலாந்து-ஏ அணி முதல் இன்னிங்சில் 400 ரன் குவித்து ஆல் அவுட்டானது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்திருந்தது (61 ஓவர்). ஜோ கார்ட்டர் 73 ரன், ஷான் சோலியா 1 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சோலியா 32, மைக்கேல் ரிப்பன் 21, லோகன் வான் பீக் 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய கார்ட்டர் 197 ரன் (305 பந்து, 26 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் வசம் பிடிபட்டார். ஜோ வாக்கர் 22 ரன் எடுத்து வெளியேற, நியூசிலாந்து-ஏ அணி முதல் இன்னிங்சில் 400 ரன்னுக்கு (110.5 ஓவர்) ஆல் அவுட்டானது. ஜேக்கப் டஃபி 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா-ஏ பந்துவீச்சில் முகேஷ் குமார் 5, சர்பராஸ் கான் 2, யஷ் தயால், நக்வஸ்வாலா, குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா-ஏ அணி 2ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்துள்ளது. கேப்டன் பிரியங்க் பாஞ்ச்சால் 47 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அபிமன்யு ஈஸ்வரன் 87 ரன், ருதுராஜ் கெயிக்வாட் 20 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

Tags : Joe Carter ,New Zealand , Joe Carter 197 against New Zealand-A 400 runs
× RELATED ஆப்கானிஸ்தான் அணியிடம் மண்ணை கவ்வியது நியூசிலாந்து: 75 ரன்னில் ஆல் அவுட்