×

மனைவி மூளையாக செயல்பட்டது அம்பலம் பப்ஜி மதன் தர்மபுரியில் கைது: பல கோடி ரூபாய் சேர்த்தது எப்படி? விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை:  பெண்கள் குறித்து தனது யூ டியூப் சேனலில் ஆபாசமாக பேசி வந்த பப்ஜி மதனை தர்மபுரியில் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மனைவி வங்கிக் கணக்கில் 4 கோடி பணம் இருப்பு வைத்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது அவரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வி.பி.என் சர்வர் மூலம் விளையாடி, அதை தனது யூடியூப் சேனல் மூலம் நேரலை ஒளிபரப்பு செய்து வந்த மதன், யூ டியூப் சேனலில் பெண்களை ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசி வருவதாகவும், அவரது சேனலை பின் தொடரும் சிறுவர், சிறுமிகளை அவரின் பேச்சு தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் எனவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பப்ஜி மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைமில் 2 புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் மத்தியக் குற்றப்பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் புளியந்தோப்பு சைபர் கிரைமில் அளிக்கப்பட்ட புகார்களும் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு யூ டியூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து யூ டியூபர் மதன் தலைமறைவானார். இந்நிலையில் அவரை பிடிக்கும் விதமாக மதனின் தந்தை, அண்ணன் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோரிடம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மதனின் மனைவி கிருத்திகா மதனுக்கு யூடியூப் சேனல் நடத்த உடந்தையாக இருந்தது தெரியவந்தது. மதன் யூடியூப் மூலம் மாதம் 7 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி அதன் மூலம் சொகுசு கார்கள் மற்றும் பங்களாக்களை வாங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து யூடியூப் சேனலுக்கு அட்மினாக செயல்பட்ட கிருத்திகாவை போலீசார் கைது செய்து 8 மாத குழந்தையுடன் சிறையில் அடைத்தனர்.இதையடுத்து, தனிப்படை அமைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேலம், பெங்களூரு, தர்மபுரி ஆகிய இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பப்ஜி மதன் தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை குண்டலப்பட்டியில் உள்ள கனிஷ் என்ற தனியார் விடுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதனை மத்திய குற்றப் பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன், டிரோன் கேமரா  கார் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.  அதனை தொடர்ந்து மதனை சேலத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தினர். அப்போது யூடியூப்பில் எவ்வாறு அநாகரீகமாக பேசுவார் என்று பேச சொல்லி அதை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர். மேலும், சென்னையில் இருந்த அவரின் 2 சொகுசு கார்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது மதனின் வங்கிக் கணக்கையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். அவரது மனைவி வங்கிக் கணக்கில் சுமார் 4 கோடி பணம் இருப்பு வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மதன் பிடிபட்டது எப்படி?பப்ஜி மதன் மூன்று சிம்கார்டுகளை பயன்படுத்தி தனது சப்ஸ்கிரைபரிடம் தொடர்பில் இருந்த போதும் வி.பி.என் என்னும் தொழில்நுட்பத்தை அவன் பயன்படுத்தியதால் அவனை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கடைசியாக, செல்போன் சிக்னலை வைத்து பெங்களூருக்கு தனிப்படை போலீசார் விரைந்து சென்ற போது அங்கு மதன் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இறுதியாக, பழைய பார்முலாவான மதன் மற்றும் அவருடைய மனைவியை அடிக்கடி தொடர்பு கொண்ட 30க்கும் மேற்ப்பட்டவர்களின் தொலைபேசி உரையாடலை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போது தர்மபுரியில்  இருந்து பேசிய உறவினர் ஒருவர், மற்றொரு உறவினரிடம் மதன் என்னிடம் பாதுகாப்பாக உள்ளான், கவலைப்படாதீர்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார் தர்மபுரிக்கு விரைந்து  சென்று அங்குள்ள லாட்ஜில் வைத்து கைது செய்தனர்.முன்ஜாமீன் மனு தள்ளுபடிதலைமறைவாக இருந்த மதன் சார்பில், முன்ஜாமீன் வழங்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மதனின் ஆடியோவை கேட்டுவிட்டு வாதிடுங்கள் என்று அவரது தரப்பு வக்கீலுக்கு அறிவுறுத்தி இருந்தார். இந்த வழக்கு  நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மதன் கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.கைதானதும் கதறியழுத மதன் மெசேஜ் அனுப்பிய மனைவிமதனும், அவரது மனைவி கிருத்திகாவும் சேலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள்.அப்போது இருவரும் காதலித்துள்ளனர். 2020ல் திருமணமானது. திருமணத்திற்கு முன்பே கிருத்திகா கர்ப்பமாக இருந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துள்ளனர். திருமணத்திற்கு பின்பு ஓட்டல் வியாபாரம் மற்றும் சில வியாபாரங்கள் கை கொடுக்காததால் சிறு வயதிலிருந்தே ஆன்லைன் விளையாட்டில் கைதேர்ந்த மதனை முதன்முதலில் யூடியூப் சேனல் தொடங்க சொல்லிக் கொடுத்தது அவரது மனைவி கிருத்திகா என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மதனை கைது செய்யும் போது மதன் போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார்.  இனி இதுபோல் செய்ய மாட்டேன். நான் செய்தது தவறுதான் என கூறியுள்ளார்.  ஆனால், அவரது மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்யும் போது வழக்கறிஞர்களுக்கு தனது செல்போனில் இருந்து மெசேஜ் அனுப்பியுளளார், என்னை கைது செய்து விட்டார்கள், சீக்கிரம் எனக்கு ஜாமீன் மனு போடுங்கள் என மெசேஜ் அனுப்பி உள்ளார்.புகழ்ந்தால் சன்மானம்பிடிபட்ட மதனிடம் வீடியோக்களை பதிவேற்ற பயன்படுத்திய டேப்லெட்டை கைப்பற்றிய போலீசார்  சோதனை செய்த போது அதில் பதிவேற்ற தயார் நிலையில் இருந்த பல வீடியோக்கள் இருந்தது. மேலும் வீடியோவில் ஆபாசமாக  பேசுவதற்காக பணம் கொடுத்து பெண்ணை தயார் செய்துள்ளார். இதுமட்டுமின்றி ஆதரவற்றோருக்கு உதவி வருவதாக மதனுக்கு ஆதரவாக பேசி  வெளியான வீடியோக்கள் அனைத்தும் பொய் எனவும் தன்னை புகழ்ந்து பேசக்கூடிய நபர்களுக்கு 5ஆயிரம் ரூபாய் முதல் 5லட்சம் வரை மதன் அளித்து வந்துள்ளார். அந்த வீடியோவை தனது சேனலில் ஒளிப்பரப்பி பார்வையாளர்களிடம் இருந்து அதிக பணத்தை வசூலித்ததும், குறிப்பாக ராணி என்ற பெண்மணிக்கு மட்டுமே 5 லட்சம் ரூபாய் வரை மதன் வழங்கியதும் தெரியவந்தது. ஆபாச வீடியோ மூலம் சம்பாதித்த பணத்தில் 2 சொகுசு கார்கள், 2 சொகுசு பங்களாக்கள் வாங்கியதும், 4 கோடி ரூபாய் வரை வங்கி கணக்கில் வைத்துள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து பப்ஜி மதன்- கிருத்திகா வங்கி கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர். மேலும் மதனின் சொகுசு கார்கள் இரண்டையும் பறிமுதல் செய்து காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.பணம் பெற்றவர்களுக்கு சிக்கல்யூடியூபர் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோரிடமிருந்து பலர் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளனர். மதனை புகழ்ந்து பேசியதற்காக பணம் பெற்றார்களா அல்லது சப்ஸ்கிரைபர்களை சேர்த்து விட்டதற்காக பணம் பெற்றார்களா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எவ்வளவு பணம் பரிமாற்றங்கள் நடந்துள்ளது. மதன் மற்றும் அவரது மனைவி வங்கி கணக்கில்  எவ்வளவு பணம் உள்ளது. வெளிநாடுகளில் ஏதாவது முதலீடு செய்துள்ளார்களா என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதனுடன் அதிக அளவில் பண பரிமாற்றங்கள் செய்தவர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்….

The post மனைவி மூளையாக செயல்பட்டது அம்பலம் பப்ஜி மதன் தர்மபுரியில் கைது: பல கோடி ரூபாய் சேர்த்தது எப்படி? விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Ambalam Babaji Madan ,Dharmapuri ,Chennai ,Pubji Madan ,YouTube ,Central Crime Branch ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி