×

அதிமுக பொதுக்குழு வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தேனி: அதிமுக பொதுக்குழு வழக்கில் இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என பேட்டியளித்தார். அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது, ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். கட்சியை ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து வழிநடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கானது இரு நீதிபதிகள் முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என தெரிவித்தனர். இதனால் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். ஓபிஎஸ் அவரது சொந்த ஊரான தேனியில் உள்ள நிலையில், காலை முதலே அவரது ஆதரவாளர்கள் அவரை சந்தித்து வந்தனர். அதன்பின்பு சென்னை புறப்பட்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், இந்த இரு நீதிபதிகள் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யப்படுமா? என்ற கேள்விக்கு, நிச்சயமாக மேல்முறையீடு செய்யவோம் என்று பதிலளித்தார். இதனடிப்படையில் சட்ட நுணுக்கங்கள் மற்றும் தீர்ப்பின் அடிப்படையில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Tags : Indirect ,Commission ,O. Panneerselvam , AIADMK, General Body Case, Appeal, O. Panneerselvam, Interview
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...