×

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று காலை தீர்ப்பு: தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று காலை தீர்ப்பளிக்கவுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது, ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
 
 இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல்கள் விஜய் நாராயண், சி.எஸ். வைத்தியநாதன், அரிமா சுந்தரம், எஸ்.ஆர்.ராஜகோபால், நர்மதா சம்பத் ஆகியோர் ஆஜரானார்கள். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் குருகிருஷ்ண குமார், அரவிந்த் பாண்டியன், சி.திருமாறன், ராஜலட்சுமி ஆகியோர் ஆஜரானார்கள்.  அனைத்து தரப்பினரும் தலா ஒருமணிநேரம் வாதம் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்,  வாதிடும்போது, ‘உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அப்பால் தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதே வழக்கில் ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் யூகங்களின் அடிப்படையில் தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்’ என்று வாதிட்டார்.

அவரை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிடும்போது, ‘ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்பது இனி நடக்காது. தனி நீதிபதி உத்தரவால் கட்சி  செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே, தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.
 
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் வாதிடும்போது, ‘‘அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் ஒரே கட்சி அதிமுகதான். தலைமைக்கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல. கட்சியின் விதிகள் மீறப்பட்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்தப்பட்டுள்ளது’’ என்று வாதிட்டனர்.  

பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பில்  வழக்கறிஞர் ராம் ஆஜராகி, அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்தல் நடத்துவது என்று செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியபிறகு பொதுக்குழு ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படவுள்ளது. இந்நிலையில், தீர்ப்பு எப்படி வரும், தங்களுக்கு சாதகமாக வருமா, பாதகமாக வருமா என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் மத்தியிலும், அதிமுக நிர்வாகிகள் மத்தியிலும் எதிர்பார்ப்பும், பரபரப்பும் நிலவி வருகிறது.

Tags : Chennai Eichort ,Opportunity General Assembly , Case challenging AIADMK General Committee's decision to invalidate verdict in Chennai High Court this morning: Another stir among volunteers and administrators
× RELATED அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற...