×

ஆர்.எஸ்.மங்கலம் அருகே இறந்த மகனுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய தந்தை: பொதுமக்கள் நெகிழ்ச்சி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே இறந்து போன மகனுக்காக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய தந்தையால் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவேலி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது ஒரே மகன் சில வருடங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார். மகன் மீது கொண்ட பாசத்தால் மகனுக்கு கோயில் கட்ட தந்தை முடிவெடுத்தார்.

அதன்படி கடந்த ஆண்டு தனது மகனின் திருஉருவச்சிலையை செய்து சக்திவேல் ஆத்மலிங்க திருக்கோயில் என்ற பெயரில் ஆலயத்தைக் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்து முடித்தார். இந்நிலையில் ஒரு வருடம் முடிந்த நிலையில் தனது மகனுக்கு அர்ச்சகர்கள் முன்னிலையில் நேற்று காலையில் யாகசாலை பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, மகா பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் செய்து அதன் பிறகு காலை 10.30 மணியளவில் மகனின் திருஉருவச்சிலைக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தான் பெற்ற பிள்ளைகளே பெற்றோரை கவனிக்காத இந்த காலத்தில், மகனை இழந்த தந்தை மகனுக்காக கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : RS Mangalam , A father who built a temple for his dead son near RS Mangalam and performed Kumbabhishekam: public is moved
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு