×

கொடைக்கானலில் கொட்டி தீர்த்த கனமழை அடுக்கம் - கும்பக்கரை மலைச்சாலை துண்டிப்பு: சீரமைப்பு பணிகள் தீவிரம்

கொடைக்கானல்:  கொடைக்கானலில் ஒரே நாளில் கனமழை கொட்டி தீர்த்ததால், அடுக்கம் கும்பக்கரை மலைச்சாலை மீண்டும் துண்டிக்கபட்டுள்ளது. திண்டுகல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 23 செமீ மழை பதிவானது. இதனால் ஏரி சாலை பகுதியில் உள்ள கடைகள் வெள்ள நீரில் மூழ்கின. கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிய தொடங்கியுள்ளது. ஏரிச்சாலை பல இடங்களில் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. நீரை அகற்றும் பணியினை கொடைக்கானல் நகராட்சி துறையினர் செய்து வருகின்றனர்.

கனமழை காரணமாக ஏற்கனவே துண்டிக்கப்பட்டு தற்காலிக சீரமைப்பு பணிகள் செய்து கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்திற்கு திறக்கப்பட்ட, கொடைக்கானல் - அடுக்கம் - கும்பக்கரை மலைச்சாலை மீண்டும் துண்டிக்கப்பட்டது. இதனால் அடுக்கம் பகுதியை ஒட்டி அமைந்துள்ள மலைக்கிராமங்களான அடுக்கம், சாமக்காட்டுப்பள்ளம், தாமரைக்குளம், பாலமலை, உள்ளிட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் தற்காலிகமாக சீரமைப்பு பணி செய்யப்பட்ட அதே இடத்தில் அடுக்கப்பட்ட மண் மூட்டைகள் ஒரு பகுதியில் சரிந்து விட்டன. சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர். இந்த தற்காலிக சீரமைப்பு பணிகள் முடிவு பெற்ற பின்னரே இந்த பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர்.

பழநி-கொடைக்கானல் சாலையில் மண் சரிவு
பழநியில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் பழநி - கொடைக்கானல் சாலையில் சவரிக்காடு அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கொடைக்கானல் செல்லும் பாதை தற்காலிமாக மூடப்பட்டது. கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் பழநி அடிவாரத்திலேயே திருப்பி விடப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த நெடுஞ்சாலைத்துறையினர் 200க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு போர்க்கால அடிப்படையில் மண் சரிவை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சீரமைப்பு பணி முடிவடையும் வரை பழநி வழியாக கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்கள் வத்தலக்குண்டு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.


Tags : Kodicanal - ,Kumbakkar Mountain , Kodaikanal, heavy rains, mountain road cut off, renovation work intensive
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...