×

ஆசனூர் மலைப்பகுதியில் கனமழை தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது; ராட்சத மரம் சாய்ந்ததால் 20 கிராமங்கள் துண்டிப்பு: மண்சரிவு-பொதுமக்கள் கடும் அவதி

சத்தியமங்கலம்:  ஆசனூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஆசனூர்-கொள்ளேகால் தரைப்பாலம் மூழ்கியது. 20 கிராமகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதியடைந்தனர். ஈரோடு  மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதி. இங்கு கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  நேற்று முன்தினம் இரவும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மலை கிராமங்களில் உள்ள ஓடை, பாலம், காட்டாறுகளில் செந்நிறமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆசனூர்- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் கொள்ளேகால்  சாலையில் அரேப்பாளையம் பிரிவு அருகே காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்த ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால் ஆசனூர் - கொள்ளேகால் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் அரேப்பாளையம், மாவள்ளம், கோட்டாடை, கேர்மாளம், கானக்கரை,  கெத்தேசால் உள்ளிட்ட  20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு போக்குவரத்து  துண்டிக்கப்பட்டது. இதனால் மலைகிராம மக்கள் அவதியடைந்தனர். தகவல் அறிந்ததும் போக்குவரத்தை சரி செய்யும் பணியில்  நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே  தரைப்பாலத்தில் விழுந்த மரம் வெட்டி அகற்றப்பட்டது.

ஆசனூர்  கொள்ளேகால் சாலையில் அரேப்பாளையம் அருகே மண் சரிவு ஏற்பட்டு மரம் முறிந்து விழுந்தது. நேற்று மதியம் மரங்கள் வெட்டி  அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சாலையில் விழுந்த மண் பொக்லைன் இயந்திரத்தை  பயன்படுத்தி அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

Tags : Asanur ,Giant Tree , Asanur Hills, Heavy rains inundate Jaffa footbridge, cut off 20 villages
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த...