×

கரீப் ரத் ரயில்களுக்காக சென்னை ஐ.சி.எப்.பில் ஏசி பெட்டிகள் தயாரிப்பு: மார்ச் மாதத்திற்குள் 723 பெட்டிகள் தயாரிக்க இலக்கு

சென்னை: கரீப் ரத் ரயில்களுக்காக, புதிய எகானமி ஏசி பெட்டிகள் தயாரிப்பு சென்னை ஐ.சி.எப்.பில் தொடங்கி உள்ளது. நாட்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் ரயில் போக்குவரத்து வசதிக்காக, ‘கரீப் ரத்’ 2006ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கரீப் ரத் என்ற சொல்லுக்கு ஏழையின் வண்டி என்று பொருள். குறைந்த செலவில் பயணிக்கத்தக்க தொடர்வண்டிகளை கரீப் ரத் என்ற பெயரில் இந்திய ரயில்வே இயக்குகிறது. இத்தகைய வண்டிகளில் கட்டணமும் குறைவு. பெட்டிகளில் அதிக இருக்கைகள் இருக்கும். ‘கரீப் ரத்’ ரயில்களை மேம்படுத்தி, குறைந்த கட்டணத்தில் எகானமி ஏசி வகுப்புபெட்டிகள் தயாரித்து வழங்க ரயில்வே வாரியம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, சென்னை ஐ.சி.எப்.பில் இந்த ரயில்களுக்கான புதிய பெட்டிகள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரிகள் கூறியதாவது:

 இந்த ரயில் தொடர்களில் அனைத்து ரயில் பெட்டிகளும் குளிர் வசதி செய்யப்பட்ட மூன்றடுக்கு ரயில் பெட்டிகளாக இருக்கும். குறைந்த கட்டணத்தில் ஏசி வசதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய வசதியாக இருக்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 723 குளிர்சாதன வசதி செய்யப்பட்ட எகானமி ரயில் பெட்டிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றனர். வழக்கமான மூன்றடுக்கு குளிர்சாதன வசதி ரயில் பெட்டிகளில் 72 படுக்கைகள்தான் இருக்கும். ஆனால், இந்த பெட்டிகளில் 83 படுக்கைகள் இருக்கும். இந்த ரயில் பெட்டிகளில் ஒவ்வொரு படுக்கைக்கும் தனியாக குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டிருக்கும்.மேலும், ஒவ்வொரு படுக்கைக்கும் தனியாக மொபைல் சார்ஜிங், படிப்பதற்கான விளக்குகள் மற்றும் அறிவிப்பு வசதிகளும் இருக்கும். இதுதவிர, ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். படுக்கைகளுக்கு இடையே கூடுதல் இடவசதி இருக்கும். எகானமி வகுப்பு பெட்டிகள் மூலமாக, அதிக அளவில் ரயில் பயணிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பெட்டிகள் முதல்முறையாக ஐ.சி.எப்.பில் தயாரிக்கப்படுகிறது.

Tags : Chennai ,ICF ,Garib Rath , Production of AC coaches in Chennai ICF for Garib Rath trains: target to manufacture 723 coaches by March
× RELATED தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமியை...