×

கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சி முனையில் பார்க்கிங் வசதி : சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி : கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சி முனையை காண ஏராளமானோர் வரும் நிலையில் இங்கு பார்க்கிங் வசதியை விரிவுபடுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலங்களில் முக்கியமான மாவட்டமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை விழாக்கள் நடக்கும் சமயத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

அதேபோல், இரண்டாவது சீசன் ஆன செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை விழாக்கால விடுமுறையை கழிக்க நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு களித்து விட்டு கோத்தகிரியில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கொடநாடு காட்சி முனைக்கு சென்று அங்குள்ள இயற்கை காட்சிகளான அழகு, ராக் பில்லர் ஆகியவற்றை கண்டு களிப்பர்.

கோத்தகிரியில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலமான கொடநாடு காட்சி முனை கண்டுகளிக்க சமவெளிப் பகுதிகளில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் கோடை சீசன் மட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்களிலும்  படையெடுக்க துவங்கி உள்ளனர். கொடநாடு காட்சி முனையை காண வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் இங்கு வாகனங்கள் நிறுத்த குறைவான பரப்பளவே இடம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.


இதனால், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போது, இரண்டாவது சீசன் தொடங்க உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. இங்கு பருவ மழைக்கு பிறகு இதமான கால நிலையை ரசிப்பதற்காக சமவெளிப் பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிமாவட்ட, வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர துவங்கி உள்ளனர்.

இங்கு நிலவும் கால நிலையானது இரவில் கடும் குளிரும், பகல் நேரங்களில் மிதமான வெப்பநிலையும் நிலவும். ஆகையால்தான், கொடநாடு காட்சி முனைக்கு ஏராளமானோர் வருகின்றனர். ஆகவே, வனத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த சுற்றுலா தலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodanadu Scene ,Gothagiri , Kothagiri, Parking Area, Kodanadu view point
× RELATED கோத்தகிரியில் தெரு நாடகம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு